விஜய் குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சேலம் சீலநாயக்கன்பட்டி சாலையில் நேற்று நடந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு பரப்புரை கூட்டத்தில் நடிகர் விஜய் பேசுகையில், “எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை எடப்பாடி வைத்துள்ளார். அண்ணா ஆரம்பித்த திமுகவை மு.க. ஸ்டாலின் வைத்துள்ளார்” என்று அரசியல் ரீதியான கடும் விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், “அடுத்தவர்கள் அட்ரஸில் அரசியல்வாதியாக இருக்கும் இவர்களெல்லாம் ஒரு சவால். என்னைப் போல் தனியாக சொந்தமாக கட்சி ஆரம்பித்து குறைந்தபட்சம் ஒரு சதவீதம் வாக்கு வாங்கிக் காட்டும் தில் இருக்கிறதா? திராணி இருக்கிறதா? 30 ஆண்டுகளாக மக்கள் இயக்கமாக இருந்து மிகப்பெரிய அரசியல் கட்சியாக வளர்ந்துள்ளோம்.
கூட்டணி கட்சிகளை மட்டும் நம்பியிருந்த 75 ஆண்டு கட்சி, 50 ஆண்டு கட்சி என ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டிருக்கும் இவர்களையெல்லாம் மீறி, இன்று களத்தில் தனியாக நின்று இந்த இரண்டே ஆண்டுகளில் முதன்மை சக்தியாக வளர்ந்து 30 சதவீதத்தைத் தாண்டி மக்கள் ஆதரவைப் பெற்றிருக்கும் நமக்கு அனுபவம் இல்லையா?” என்று காட்டமாகக் கேள்விகளை எழுப்பினார்.மேலும், “கொள்ளையடிப்பதில் எல்லாம் எங்களுக்கு அனுபவம் இல்லைதான். கொள்கையைப் பெயருக்கு மட்டும் வைத்துக் கொண்டு நேரடியாக சரணடைவது, மறைமுகமாக சரணடைவது – இதிலெல்லாம் எங்களுக்கு அனுபவம் இல்லைதான். சுட்டுப் போட்டாலும் வராது” என்று அதிமுக, திமுக என இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பாவம், அவர் அனுபவமே இல்லாதவர். முதலில் வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும். திரிஷா வீட்டிலிருந்து வெளியே வரவேண்டும். வெளியில் வந்தால் தான் எல்லாமே நடக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்துக்கு தவெக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அக்கட்சியின் பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் பதிவில், “ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் ஒருவர், எத்தகைய அரசியல் கண்ணியத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற அடிப்படை அறிவைக்கூட நயினார் நாகேந்திரன் இழந்துவிட்டார். எங்கள் கிளைச் செயலாளர் கூட இவரை விடக் கண்ணியத்தோடு பேசுவார்.
அறிவாலயத்தைத் திட்டினால் கமலாலயத்தில் உள்ள ஒருவருக்குக் காய்ச்சல் வருகிறதா? அறிவாலயமும் கமலாலயமும் ஓராலயமாகிவிட்டதா? 4 கோடி ரூபாய் சிக்கலில் சிக்கித் தவிக்கும் ஒரு நபர், அடுத்தவர்களுக்கு அறிவுரை கூறுவது இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. கடந்த தேர்தலில் கட்டைப்பையில் கட்டுக் கட்டாகப் பணம் தூக்கித் திரிந்த நாகம், இன்று ஊருக்கு உபதேசம் செய்வதா?முதலில், உங்கள் முதுகில் படிந்துள்ள கறைகளைக் கங்கை நீரால் கழுவுங்கள். எங்கள் தலைவர் மீது விழுகிற அங்கீகார வெளிச்சம் உங்கள் கண்களைக் கூசச் செய்கிறது; உங்கள் அறிவைக் குருடாக்கிவிட்டது. பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கும் நீங்கள், வரம்பு மீறி விமர்சனம் செய்தால், தமிழகப் பெண்கள் திருப்பித் தரப்போகும் பதிலடிகளுக்கு உங்களால் பதில் சொல்ல முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், விஜய் குறித்த பாஜக மாநிலத் தலைவர் நாகேந்திரனின் கருத்துக்கு திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், “இந்தியாவை ஆளும் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர், அரசியல் கருத்துகளைச் சொல்லும்போது, பொதுவெளியில் பயணிக்கும் பெண்ணைப் பற்றி அவதூறாகப் பேசுவது அழகல்ல.
பெண்களைக் கண்ணியத்துடன் பேசுவதும், நடத்துவதுமே நாகரீக அரசியல் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.
