அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருக்கும் நிலையில் என் மீது நடவடிக்கை எடுத்தால் கவலையில்லை என்று தளவாய் சுந்தரம் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி தமிழகத்தில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது. நாகர்கோவிலை அடுத்த ஈசாத்தி மங்கலம் பகுதியில் இருந்து பூதப்பாண்டி வரை நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை அதிமுக மாவட்ட செயலாளராக இருந்த தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்.
இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்தநிலையில் இன்று (அக்டோபர் 8) கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர், அதிமுக அமைப்புச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தளவாய் சுந்தரம், “தான் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் பங்கேற்பது புதிது அல்ல. தனது தொகுதியில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற்றதால், அதில் கலந்து கொண்டு தொடங்கி வைத்தேன். என் மீது நடவடிக்கை எடுத்தால் கவலையில்லை” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில் திருச்சியில் பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜாவிடம் தளவாய் சுந்தரம் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “வரவேற்கிறேன்… ஆர்.எஸ்.எஸில் சேர்பவர் யாராக இருந்தாலும், என் நண்பர் தளவாய் சுந்தரமாக இருந்தாலும் வரவேற்கிறேன்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
சாம்சங் தொழிலாளர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்… டி.ஆர்.பி ராஜா வேண்டுகோள்!
சொத்துவரி உயர்வு: திமுக அரசைக் கண்டித்து அதிமுக மனித சங்கிலி போராட்டம்!