பொங்கலுக்கு வெளியாகும் வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நேற்று மாலை (டிசம்பர் 24) நடைபெற்றது.
படக்குழுவினர் அனைவரும் பேசி முடித்த நிலையில் ரசிகர்கள் நடிகர் விஜய் மேடையேறி பேசுவதற்காக ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இறுதியாக தொகுப்பாளர்கள் ராஜு மற்றும் ரம்யா இருவரும், நடிகர் விஜய்யை மேடைக்கு பேச வருமாறு அழைத்தனர். இதனையடுத்து ரசிகர்களின் அரங்கம் அதிரும் சத்தத்துடன் விஜய் மேடையேறினார்.
ஏறியதும் மைக்கை பிடித்த அவர், தனது பேச்சை நெஞ்சில் குடியிருக்கும் என்று தொடங்க, அரங்கம் அடங்குவதற்கு நீண்ட நேரம் எடுத்தது.
அதன் தொடர்ச்சியாக ”வாய்ப்பு கிடைக்கிறப்போலாம் நன்றி சொல்லிட்டே இருக்கனும். என்னை உருவாக்கிய உளிகளுக்கு என் நன்றி” என்று சொல்லியபடியே ரஞ்சிதமே ஸ்டைலில் ரசிகர்களுக்கு பிளையிங் கிஸ் கொடுத்தார்.
தனது முத்தம் குறித்து ”உங்க எல்லாருக்கும் முத்தம் கொடுக்க ஒரு ஸ்டைல் மாட்டுச்சு. இனிமே இது தான்” என்றார்.
அதன்பின்னர் வாரிசு திரைப்படத்தில் தன்னுடன் பணியாற்றிய ஒவ்வொருவர் குறித்தும் விஜய் தனிதனியாக பேசினார்.
முதலில் தயாரிப்பாளர் தில் ராஜுவிடம் ”வாரிசுக்கு வாழ்த்துக்கள். பொறந்த குழந்தைக்கு சொன்னேன். வாரிசு 2 எப்போ சார் ? இப்போ நான் படத்த பத்தி கேட்டேன் சார் என்று கூற அரங்கமே சிரிப்பால் குலுங்கியது.
பின்னர் வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு படத்தை கொடுத்ததற்கு இயக்குநர் வம்சிக்கு நன்றி கூறினார்.
”அம்மா சாங் தான் இந்த படத்தோட லைஃப். என்னோட ஃபேவரைட். இந்த பாட்டுக்காக தமனுக்கு பெர்ஸ்னலா நன்றி சொல்லிக்கிறேன்.
படத்துல கொஞ்ச நேரமே வந்தாலும், எஸ்.ஜே.சூர்யா மற்றும் குஷ்பு மேடத்துக்கு என்னோட இதயத்தில் இருந்து நன்றிகள்.
யோகிபாபுவோட வளர்ச்சிய பாக்க மகிழ்ச்சியாக இருக்கு. ஆரம்பத்துல ஏதாவது ஒரு படத்துல நடிக்க அவர் ஆசப்பட்டார். ஆனால் இப்போ எல்லா படத்துலயும் அவர் தேவைப்படுறாரு.
செல்லம்னு சொன்னா அது பிரகாஷ் ராஜ் சாரு தான். இந்த படத்தோட முத்துப்பாண்டி அவருதான்.

இந்த முறை குட்டிக்கதை ஒரு குடும்பத்தைப் பற்றியது, ஏனென்றால் வாரிசு ஒரு முழுமையான குடும்பப் படம். இது ஒரு தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களுக்கு இடையே நடக்கும் கதைதான் வாரிசு.” என்றார்
இதற்கிடையே விஜய்யிடம் உங்களுக்கு எது போதை தரும்? என்று தொகுப்பாளர்கள் கேட்டனர். அதற்கு ரசிகர்களை நோக்கி கையை நீட்டி காண்பித்தார்.
அதனை தொடர்ந்து, “அன்பு தான் உலகின் மிகப்பெரிய ஆயுதம். எனது ரசிகர்கள் நீண்ட காலமாக ரத்ததானம் செய்து வருவதைப் பெருமையாக உணர்கிறேன். இரத்த தானம் செய்வதற்கான செயலியை ஆரம்பித்துள்ளேன்.
இனம், மதம், ஜாதி, வேறுபாடுகள் இல்லாதது ரத்தம் மட்டுமே. குறைந்த பட்சம் இந்த ஒரு நல்ல குணத்தையாவது நாம் இரத்தத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ரத்தத்தில் இருந்து நான் சமத்துவத்தைக் கற்றுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு முறையும் யாராவது உங்களை எதிர்க்கும் போது அல்லது உங்களுக்கு பிரச்சனை ஏற்படும்போது நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கலாம். தேவையான விமர்சனங்கள் மற்றும் தேவையற்ற எதிர்ப்புகள் தான் நம்மை தொடர்ந்து இயங்க வைக்கும்.” என்றார்.
தொடர்ந்து ஒரு இன்ஸ்பிரேசன் ஸ்டோரிக்கு நகர்ந்தார். ”1990 காலகட்டத்தில் ஒரு நடிகர் எனக்கு போட்டியாளராக மாறினார். பின்னர் அவர் ஒரு தீவிர போட்டியாளராக மாறினார். அவருடைய வெற்றியால் நானும் கடினமாக ஓடினேன். நான் அவரை விட வெற்றிபெற விரும்பினேன், அத்தகைய போட்டியாளர் நம் அனைவருக்கும் தேவை. எனக்கு அந்த போட்டி ஜோசப் விஜய். உங்களுடன் போட்டியிடுங்கள். அது தான் உங்களை வளர்க்கும்.” என்றார்.
இறுதியாக ரசிகர்களின் ஆரவாரத்திற்கிடையே ரஞ்சிதமே பாடலை ஆடியபடி பாடிய விஜய் தனது பேச்சை முடித்தார்.
பின்னர் அரங்கில் இருந்த ரசிகர்களுடன் ஒரு செல்பி வீடியோ எடுத்த விஜய் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் #NenjilKudiirukkum என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.
1 மணி நேரத்தில் அந்த வீடியோ 2 மில்லியன் பார்வைகளை பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
“விஜய் தான் சூப்பர்ஸ்டார்னு சொன்னப்போ கலைஞரே ஆச்சரியப்பட்டார்! ஆனா..!” – சரத்குமார்
