உலக நாடுகளில் சுற்றுலா வாசிகள் மிகவும் விரும்பும் நாடாக தாய்லாந்து திகழ்கிறது. கடந்த இரண்டு வருடம் கொரொனா காரணமாக அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் தற்பொழுது கொரொன் குறைந்துள்ள நிலையில், அந்த நாட்டில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. குறிப்பாக பயணத்திற்கு கண்டிப்பாக முன்பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டில் தாய்லாந்து நாட்டிற்கு 4 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர், ஆனால் ஒரு மாபெரும் தொற்றின் காரணமாக அது மிகவும் குறைந்தது.
தாய்லாந்தில் கொரோனாவால் இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் கொரோனா பாதிப்பிலிருந்து தாய்லாந்து மிகவும் வேகமாக மீண்டது. மேலும், தாய்லாந்தில் உள்ள மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி விட்டனர் என்று அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தாய்லாந்தில் தற்பொழுது தொற்று குறைந்துள்ள நிலையில், பொதுமக்கள் இனி பொது இடங்களுக்கு செல்லும் போது முக கவசம் அணிய தேவையில்லை.
இந்நிலையில் கஞ்சாவுக்கு அனுமதி தந்த முதல் ஆசிய நாடு என்ற பெருமையையும் சமீபத்தில் தாய்லாந்து பெற்றது. இதனால் தாய்லாந்துக்கு பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிகமாக குவிந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் பயண கட்டுப்பாடுகளையும் அந்த நாடு தளர்த்தி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தாய்லாந்து கலாசாரத்துறை அமைச்சர் பிபத் ரச்சகித்பிரகான் கூறுகையில், “தாய்லாந்துக்கு சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில், தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ், மருத்துவ பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ், மருத்துவ காப்பீடு, ஓட்டல் அறை முன்பதிவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. தாய் நாட்டிற்கு வருகை தரும் அனைத்து சுற்றுலா பயணிகளையும் அன்புடன் வரவேற்கிறோம்.” என்று தெரிவித்தார்.