தமிழக பாஜக மாநில பட்டியல் அணி தலைவராக இருந்த தடா பெரியசாமி இன்று (மார்ச் 30) அதிமுகவில் இணைந்தார்.
விடுதலைச்சிறுத்தைகள் இயக்கமாக இருந்தபோது, திருமாவளவனுடன் சேர்ந்து பணியாற்றியவர் தடா பெரியசாமி . அந்த இயக்கத்தின் முக்கிய பிரமுகராகவும் இருந்தார். ஒரு கட்டத்தில், கருத்து மாறுபாட்டால் அந்த இயக்கத்திலிருந்து விலகினார். பின்னர் பாஜகவில் சேர்ந்த அவருக்கு, அக்கட்சியின் தமிழக பட்டியலினப் பிரிவுத் தலைவர் பதவி அளிக்கப்பட்டது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் விசிக தலைவர் திருமாவளவனை எதிர்த்து சிதம்பரம் தொகுதியில் போட்டியிட தலைமையிடம் சீட் கேட்டார். ஆனால், சிதம்பரம் தொகுதி வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயரும் பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்திகாயினிக்கு ஒதுக்கப்பட்டது.
இதனால் அதிருப்தியில் இருந்த தடா பெரியசாமி, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இன்று காலை அவரை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 7 தனித்தொகுதிகள், குறிப்பாக சிதம்பரம் தொகுதியில் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறேன்.
எனது சொந்த தொகுதி சிதம்பரம். என்னிடம் எந்தவித ஆலோசனையும் செய்யாமல் வேலூரை சேர்ந்த கார்த்திகாயினிக்கு சீட் கொடுத்திருக்கிறார்கள்.
பட்டியலின தலைவராக இருந்த எனக்கே மரியாதை இல்லையென்றால், பட்டியலினத்தை சேர்ந்த மற்றவர்களுக்கு பாஜகவில் எப்படி மரியாதை இருக்கும்?
இதற்கு காரணம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணைமைச்சர் எல்.முருகன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் தான். இவர்கள் மூன்று பேரும் தான் கட்சியா?
குறிப்பாக திருவள்ளூவர் தொகுதியில் பொன் பாலகணபதிக்கு சீட் ஒதுக்கியிருக்கிறார்கள். அவர் தேவந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்தவர். ஆனால், திருவள்ளூர் தொகுதியில் பறையர் சமுதாயம் தான் அதிகளவில் வாக்காளர்கள் உள்ளனர். இது என்ன நடைமுறை?
சனாதனத்தை ஒழிப்பேன் என்றும் பிரதமர் மோடியையும் திருமாவளவன் விமர்சித்து வருகிறார். அப்படிப்பட்டவரை எதிர்த்து நான் களமாடிக்கொண்டிருக்கிறேன். அந்த தொகுதியில் கார்த்திகாயினிக்கு சீட் ஒதுக்கியிருக்கிறார்கள்.
அண்ணாமலை, எல்.முருகன், கேசவ விநாயகம் ஆகியோர் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் என்னை தவிர்த்து வேறு ஒரு வேட்பாளரை களமிறக்கியுள்ளனர். திருமாவளவனுக்கு ஆதரவாக பாஜக செயல்படுகிறது.
சமூக நீதி பேசும் பாஜக கார்த்திகாயினிக்கு வேலூர் பொதுத்தொகுதியில் வாய்ப்பளித்திருக்க வேண்டும். இதுதொடர்பாக அண்ணாமலையிடம் தெரியப்படுத்தினேன். கட்சி எடுத்த முடிவு என்று சொல்லிவிட்டார்” என்று தடா பெரியசாமி தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
என்ன இருந்தாலும் அதிர்ஷ்டம் வேணும்… உண்மையா?
டேனியல் பாலாஜி மறைவு: கெளதம் மேனன், வெற்றி மாறன் அஞ்சலி!