குறு நிறுவனங்களுக்கு மானியம் ரூ.10 லட்சமாக உயர்வு : MSME -களுக்கான அறிவிப்புகள்!

Published On:

| By Kavi

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஏப்ரல் 9) குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. tha mo anbarasan announcement for msme

அப்போது துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் 10 விழுக்காடு கூடுதல் முதலீட்டு மானியத்தின் உச்சவரம்பு ரூ.5 லட்சத்திலிருந்து ரூ. 10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.

இயற்கையாக அமையப் பெற்றிருக்கும் தொழில் குழுமங்களின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் அக்குழுமங்களுக்கான உட்கட்டமைப்பு, பொது வசதிகள் மற்றும் இதர முன்னெடுப்புகளுக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். 

பழங்குடியினர் நிறைந்த பகுதிகளில் கடன் உத்தரவாதத்துடன் (Credit Guarantee) ரூ.100 கோடி அளவில் பழங்குடியினருக்கு, தொழில் தொடங்க கடனுதவிகள் வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

கிராம அளவிலான கைவினை குழுக்கள் மற்றும் குறுந்தொழில் குழுமங்கள் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை பாதுகாத்திடும் பொருட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.18.18 கோடி மதிப்பில் ஏற்படுத்தி தரப்படும்.

தேசிய சிறு தொழில் நிறுவனத்தின் ஒரு முனை பதிவு மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான சந்தை ஆகிய திட்டங்களில் பதிவு செய்வதை ஊக்குவிக்கும் பொருட்டு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும். 

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் (FPOs) மூலம் ஐந்து தனித்துவமான தயாரிப்புகளுக்கு பொதுவான வணிகக் குறியீடுகள் (branding) ரூ.3.62 கோடியில் உருவாக்கப்படும்.

60 வயதிற்கு உட்பட்ட இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற்கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு, விபத்து மற்றும் பாம்புகடியினால் ஏற்படும் உயிரிழப்பிற்கு இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க ஏதுவாக ரூ.1.50 கோடி மதிப்பில் மூலதன நிதியம் உருவாக்கப்படும்.

இண்ட்கோ தேயிலை தொழிற்சாலைகளின் தேயிலை சாகுபடிக்கு தேவைப்படும் விவசாய இயந்திரங்கள் ரூ3.25 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு இண்ட்கோ தேயிலை தொழிற்சாலைகளின் உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கு வழங்கப்படும்.

தென்னை நார் சார்ந்த மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய முன்வரும் தொழில் ஆர்வலர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக தொழில் நுட்ப பரிமாற்றம், பயிற்சி, மானியங்கள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து ரூ.5 கோடி மதிப்பில் ஒரு திட்டம் உருவாக்கப்படும்.

தென்னை நார் உற்பத்தியில், மதிப்பு கூட்டலை ஊக்குவிக்கும் விதத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு மேம்பாட்டு மையம் ரூ.9.86 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் தென்னை நார் சார்ந்த பொருட்களுக்கு சந்தை அங்கீகாரம் பெற தனித்துவமான வணிகக் குறியீடு (branding) உருவாக்கப்படும்.

தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பணிபுரியும் 20 பணியாளர்களுக்கு பிற மாநில தேயிலை தொழிற்சாலைகளில் திறன் மேம்பாட்டு பயிற்சி ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் அளிக்கப்படும்.

தொழிற்கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு பசுந்தேயிலை வழங்கும் உறுப்பினர்கள் கூடுதலாக பசுந்தேயிலை வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் ரூ.4 லட்சம் மதிப்பில் செயல்படுத்தப்படும்.

ஏற்றுமதி நிறுவனங்களுக்கு, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத சிப்பமிடும் (packaging) முறைகள் குறித்து, ரூ.30 லட்சம் மதிப்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.

மின்னணு வர்த்தக தளங்களில், கைவினை கலைஞர்கள் உள்ளிட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களை, பதிவேற்றம் செய்து அவர்களது உற்பத்திப்பொருட்களை சந்தைப் படுத்துவதற்கு வசதி செய்து தரப்படும்.

டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 120 இளைஞர்களுக்கு ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் உணவு பதப்படுத்தும் தொழில் தொடங்க தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

உணவுத் தொழில்நுட்பம் மற்றும் வேளாண் துறை சார்ந்த 25 வேளாண் மற்றும் உணவுத் தொழில் நுட்ப பட்டதாரிகளுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

கவரிங் நகை தொழிலில் புகழ் பெற்ற சிதம்பரம் பகுதியில், லால்புரம் கிராமத்தில் கவரிங் நகை உற்பத்தியாளர்களுக்காக 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.1.24 கோடி திட்ட மதிப்பில் தமிழ்நாடு சிட்கோ மூலம் சிறப்பு புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

வேளாண் பொருட்கள் உற்பத்தி சார்ந்த தொழில் முனைவோர்களுக்கு உதவிடும் வகையில் ஈரோடு சிட்கோ தொழிற்பேட்டை பகுதி-II-ல், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் ரூ.15.23 கோடி திட்ட மதிப்பில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒதுக்கீடு செய்யப்படும்.

ஈரோடு பெருந்துறை வட்டம், சீனாபுரத்தில் ரூ.7.77 கோடி திட்ட மதிப்பில் நெசவு குழுமம் அமைக்கப்படும்.

திருச்சி முசிறி வட்டம், முசிறியில் ரூ.3 கோடி திட்ட மதிப்பில் கோரைப்பாய் குழுமம் அமைக்கப்படும்.

மதுரை திருமங்கலத்தில் ரூ.7.97 கோடி திட்ட மதிப்பில் மகளிர் தொழில் முனைவோர்களுக்கான சிறு தானிய குழுமம் நிறுவப்படும்.

சென்னை மாவட்டம், பெரம்பூரில் ரூ.5 கோடி திட்ட மதிப்பில் வெள்ளி கலைப் பொருட்கள் குழுமம் அமைக்கப்படும்.

திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் வட்டம், கல்லிப்பாளையம் கிராமத்தில் ஆஃப்செட் பிரிண்டிங் மற்றும் புக் பைண்டிங் குழுமத்திற்கான பொது வசதி மையம் ரூ.31.75 கோடி திட்ட மதிப்பில் நிறுவப்படும்.

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பெருமாபாளையம் கிராமத்தில் அச்சு குழுமத்திற்கான பொது வசதி மையம் ரூ.29.93 கோடி திட்ட மதிப்பில் நிறுவப்படும்.

கரூர் மாவட்டம், மணிமங்கலம் வட்டம், ஆத்தூர் கிராமத்தில் செயற்கையிழை ஆடைகள் (Synthetic Textile Clothing) குழுமத்திற்கான பொது வசதி மையம் ரூ.31.75 கோடி திட்ட மதிப்பில் நிறுவப்படும்.

இளைஞர்களிடையே புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவிற்கான சிந்தனையை ஊக்குவிக்க, தமிழ்நாடு இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டமானது (TNYIEDP), 2000 உயர்கல்வி நிறுவனங்களில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் “நிமிர்ந்து நில்” என்கிற பெயரில் செயல்படுத்தபடும்.

தமிழ்நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட 100 கிராமங்களில், அனைவரையும் உள்ளடக்கிய தொழில்முனைவு வளர்ச்சி, ஊரக பகுதிகளில் புத்தாக்கம், நிலையான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றினை மையமாகக் கொண்டு 100 புத்தொழில் நிறுவனங்களை உருவாக்கும் “கிராமம் தோறும் புத்தொழில்” திட்டம் ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.

விண்வெளித் தொழில்நுட்பம், கடல்சார் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் இயங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு தகுந்த ஆதரவு வழங்கும் விதமாக தூத்துக்குடியில் புதிய வட்டார புத்தொழில் மையம் அமைக்கப்படும் உள்ளிட்ட 43 அறிவிப்புகளை வெளியிட்டார். tha mo anbarasan announcement for msme

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share