ADVERTISEMENT

ஜிஎஸ்டி வரி – 4,000 ஜவுளி கடைகள் அடைப்பு: ரூ.50 கோடி வர்த்தகம் பாதிப்பு!

Published On:

| By Balaji

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் நேற்று (டிசம்பர் 10) அனைத்து ஜவுளி சார்ந்த நிறுவனத்தினரும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சமீபகாலமாக நூலின் விலையேற்றத்தால் ஜவுளி உற்பத்தியாளர்கள், விசைத்தறியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நூல் விலை உயர்வு காரணமாக விசைத்தறி உரிமையாளர்கள் தங்களது உற்பத்தியைக் குறைத்து உள்ளனர். சில இடங்களில் உற்பத்தியை நிறுத்திவிட்டனர். நூல் விலையை ஒழுங்குமுறைப்படுத்தி விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதன் பின்னர் நூல் விலை சீரானது.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு மற்றொரு பேரிடியாக ஜிஎஸ்டி வரி 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாக உயர்த்தப்பட்டது. இதனால் அனைத்து வகையான ஜவுளி தொழில்களும் கடும் நஷ்டத்தை சந்திக்கும் சூழ்நிலை நிலவியது. இந்த ஜிஎஸ்டி வரி உயர்வுக்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.

ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் ஜவுளி தொழில் சார்ந்தவர்கள் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் ஒரு நாள் அனைத்து ஜவுளி சார்ந்த நிறுவனங்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

அதன்படி நேற்று (டிசம்பர் 10) ஈரோட்டில் அனைத்து ஜவுளி கடைகள், குடோன்கள் அடைக்கப்பட்டிருந்தன. ஈரோடு மாநகரில் திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜர் வீதி, என்.எம்.மஸ் காம்பவுண்ட், அகில்மேடு வீதி, ராமசாமி வீதி, சொக்கநாத வீதி போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இதனால் எப்போதும் பரபரப்பாகக் காணப்படும் இடங்கள் அனைத்தும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. ஈரோட்டில் 4,000 ஜவுளி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதற்கு ஆதரவு தெரிவித்து ஈரோடு ஜவுளி சந்தை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

ADVERTISEMENT

ஜவுளி சந்தையில் உள்ள 272 தினசரி ஜவுளி கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் சென்னிமலை விசைத்தறி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்து விசைத்தறி உற்பத்தியை ஒருநாள் நிறுத்தினர். இந்த கடை அடைப்பு காரணமாக ரூ.50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள கிளாத் மெர்ச்சன்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் கலைச்செல்வன், “மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகள், தொடர்ந்து உயர்த்தப்படும் நூல் விலை, கொரோனா பரவல் தடுப்புக்கான பொது முடக்கம் போன்ற காரணத்தால் ஜவுளி சார்ந்த அனைத்து தொழிலும் முடங்கிப்போனது.

விசைத்தறி, டையிங், பிரின்டிங், பிளீச்சிங், காலண்டரிங், ஆயத்த ஆடை உள்ளிட்ட பிற ஆடை தயாரிப்பு, ஜவுளி விற்பனை என அனைத்து நிலையிலும் ஆர்டர்கள் பெற்று, குறைந்தபட்ச லாபம் கூட ஈட்ட முடியாமல், கடும் நஷ்டத்தை சந்திக்கிறோம்.

இந்த நிலையில் ஜவுளிக்கான, 5 சதவிகித ஜிஎஸ்டி. வரியை 12 சதவிகிதமாக உயர்த்தியுள்ளனர். இதனால், அனைத்து வகையான ஜவுளி தொழிலும் மேலும் நஷ்டத்தையும், சிக்கலையும் சந்திக்கும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஜவுளி விலை உயரும்.

ஜவுளி தொழிலை நம்பி பல லட்சம் குடும்பங்கள் உள்ளதால், நூல் விலையை குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே உயர்த்த வேண்டும். ஜிஎஸ்டி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து வகையான ஜவுளி சார்ந்த நிறுவனங்களும் கடையடைப்பில் ஈடுபட்டன’’ என்று கூறியுள்ளார்.

**-ராஜ்**

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share