7 மணி நேரம் நடப்பீர்களா? ஒரு நாளுக்கு ரூ.28,000 ஊதியத்துடன் டெஸ்லா நிறுவனத்தில் வேலை!

Published On:

| By christopher

Tesla job with salary 28000 per day

உங்களால் ஒரு நாளுக்கு 7 மணி நேரம் நடக்க முடிந்தால், நாளொன்றுக்கு ரூ.28,000 ஊதியம் ஈட்ட முடியும் என்றால் நம்புவீர்களா?

உலக பணக்காரர் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, அறிவித்துள்ள வேலைவாய்ப்பு இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், கடந்த 2021 அன்று ஆப்டிமஸ் என்ற மனித உருவ ரோபோ குறித்த திட்டத்தை அறிமுகம் செய்தார்.

தொழிற்சாலை வேலை முதல் பராமரிப்பு பணிகள் வரை, அனைத்து பணிகளையும் செய்யும் திறன் கொண்ட வகையில் இந்த ரோபோ தயாரிக்கப்படும் என அறிவித்திருந்தார்.

கடந்த ஒரு ஆண்டாக இந்த ரோபோவை தயார் செய்வதில் தீவிர முனைப்பு காட்டி வரும் டெஸ்லா நிறுவனம், அதன் ஒரு பகுதியாகவே இந்த வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது.

‘தரவு சேகரிப்பு உதவியாளர்’ என்ற பெயரில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பில், ஒருவர் மோஷன்-கேப்சர் சூட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஹெட்செட் ஆகியவற்றை அணிந்துகொண்டு, தினமும் 7 மணி நேரத்திற்கு சோதனை வழியில் நடக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் 5’7″ முதல் 5’11” அடி உயரம் இருக்க வேண்டும், 13.6 கிலோவுக்கு அதிகமான எடையை தூக்கும் திறனை கொண்டிருக்க வேண்டும் எனவும் டெஸ்லா தெரிவித்துள்ளது.

மேலும், நாள் முழுவதும் நிற்க, உட்கார, நடக்க, குனிய, வளைய மற்றும் திரும்ப என அனைத்து உடல் சார்ந்த திறன் பெற்றிருக்க வேண்டும் எனவும் டெஸ்லா தெரிவித்துள்ளது.

இந்த பணிக்கு தகுதியானவர்களுக்கு அவர்களின் அனுபவம், திறன் மற்றும் இருப்பிடத்தை பொறுத்து,

ஒரு மணி நேரத்திற்கு $25.25 முதல் $48 வரை, அதாவது ரூ.2,120 முதல் ரூ.4,000 வரை ஊதியமாக வழங்க டெஸ்லா நிறுவனம் தயாராக உள்ளது.

இந்த வேலை காலை 8:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை, மாலை 4:00 மணி முதல் நள்ளிரவு 12:30 மணி வரை, அதிகாலை 12:00 மணி முதல் காலை 8:30 மணி வரை என 3 ஷிப்ட்களை கொண்டுள்ளது.

இந்த வேலைக்கான விண்ணப்பங்களை டெஸ்லா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

ஒருவேளை நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால், பணியிடம் கலிபோர்னியாவில் உள்ள பாலோ ஆல்டோவில் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

– மகிழ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஹெல்த் டிப்ஸ்: எல்லாருக்கும் ஏற்றதா எம்சிஆர் செருப்புகள்?

பியூட்டி டிப்ஸ்: அடிக்கடி ஃபேஸ் பேக் போடுபவரா நீங்கள்? இந்த விஷயத்தில் கவனம் தேவை!

டாப் 10 நியூஸ் : ஜம்முவில் ராகுல் முதல் கொல்கத்தா போராட்டத்தில் கங்குலி வரை!

கிச்சன் கீர்த்தனா : மரவள்ளிக்கிழங்கு மசால் வடை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share