திருப்பூரில் கவிஞர் வைரமுத்து மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று காலை, சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் திடீரென சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
விசாரணையில் அந்தப் பெண்ணின் பெயர் ஜெயா என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. அந்த பெண் தனது கோரிக்கைகளை எந்த அரசும் நிறைவேற்றவில்லை எனக் கூறி அடிக்கடி இத்தகைய போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவந்தது.
இந்நிலையில், கொங்கு கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவையின் தொடக்க விழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கவிப்பேரரசு வைரமுத்து திருப்பூர் வந்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வழக்கறிஞர்கள் சங்கத்தினர் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
அப்போது, தர்ணாவில் ஈடுபட்டிருந்த அந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் திடீரென தன் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றி, வரவேற்பு அளித்த கூட்டத்தின் மீது வீசினார்.
நல்வாய்ப்பாக செருப்பு கவிஞர் வைரமுத்து மீது படாமல் தவறி விழுந்தது.இதையடுத்து, வழக்கறிஞர்கள் வைரமுத்துவை உடனடியாக பாதுகாப்பாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
