ADVERTISEMENT

திருப்பரங்குன்றத்தில் பதற்றம்…CISF-க்கு அனுமதி மறுப்பு- தடுப்புகள் தகர்ப்பு- போலீசார் மண்டை உடைப்பு!

Published On:

| By Kavi

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சினையால் இந்து அமைப்பினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ADVERTISEMENT

கார்த்திகை தீபத் திருநாளில் திருப்பரங்குன்றம் உச்சி பிள்ளையார் கோயில் அருகே மோட்ச தீபம் ஏற்றும் இடத்தில் தீபம் ஏற்றுவது நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

ADVERTISEMENT

இந்தசூழலில் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இந்த ஆண்டு தீபம் ஏற்றுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று கோரி மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராம ரவிக்குமார் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

 இதேபோல், பரமசிவம், அரசுபாண்டி, கார்த்திகேயன்  உள்ளிட்டோரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

ADVERTISEMENT

இந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.

ராம ரவிக்குமார் உள்ளிட்ட அவரது ஆதரவு மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் சீனிவாசன், வழக்கறிஞர்கள் அருண் சுவாமிநாதன், வெங்கடேஷ், குமரகுரு, நிரஞ்சன் எஸ்.குமார், சுப்பையா, பொன்னுரங்கன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.

ADVERTISEMENT

அப்போது அவர்கள், தீபத்தூணில் தீபம் ஏற்றினால் தான் சுற்றி உள்ள ஊர் மக்களுக்கு தெரியும். பிள்ளையார் கோயில் உச்சியில் ஏற்றினால் யாருக்கும் தெரியாது. தீபத்தூணில் ஏற்றுவதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அனுமானத்தின் அடிப்படையில் அறநிலையத்துறை தான் ஆட்சேபம் தெரிவிக்கிறது. சிக்கந்தர் தர்கா எல்லை சுற்றுச்சுவரிலிருந்து தீபத்தூண் 63.20 மீட்டர் தூரத்தில் அமைந்து உள்ளது’ என்று வாதிட்டனர்.

இதற்கு அரசுத் தரப்பில், “1920 முதல் உச்சி பிள்ளையார் கோயிலில் தான் தீபம் ஏற்றப்படுகிறது. 105 ஆண்டுகளாக இந்த முறை பின்பற்றப்படுகிறது. இந்த முறையை மாற்ற முடியாது. தீபத்தூணில் தான் தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்கு மனுதாரர்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கும் வகையில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று வாதிடப்பட்டது.

“உச்சிபிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றலாம் என்று 1994ல் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மனுதாரரின் கோரிக்கையை திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் நிராகரித்ததை எதிர்த்து அறநிலையத் துறை இணை ஆணையர் மற்றும் ஆணையரிடம் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். ஆனால் நேரடியாக நீதிமன்றத்துக்கு வந்தது தவறு” என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

வக்ப் வாரிய தரப்பில், ‘சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டும். கோவில் நிர்வாகத்திற்கு வக்ப் வாரியம் ஒத்துழைப்பு அளிக்க தயார். ஒட்டுமொத்த மலையையும் அளவீடு செய்தால் தான் தீர்வு கிடைக்கும்” என்று வாதிடப்பட்டது.

திருப்பரங்குன்றம் தர்கா சார்பில், ”தீபத்தூண் தர்கா எல்லைக்குள் இருப்பதால் அங்கு தீபம் ஏற்றமுடியாது. வழக்கம் போல் தீபம் ஏற்றுவதில் எந்த ஆட்சேபம் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உள்ள மலை மீது அமைந்துள்ள தீபத்தூணில் இந்த ஆண்டு முதல் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். தீபத்தூணில் விளக்கு ஏற்றாவிட்டால் கோவில் உரிமைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது” என்று உத்தரவு பிறப்பித்தார்.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து, அறநிலையத்துறை சார்பில் நேற்றே மேல்முறையீடு செய்யப்பட்டது.

இன்று கார்த்திகை தீபத் திருநாள் என்பதால் மதியம் முதல் இந்த மேல்முறையீடு மீதான விசாரணை நடைபெற்றது.

அறநிலையத் துறையின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் மாலை 6 மணிக்குள் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும். இல்லையென்றால் 6.05 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மனுதாரருக்கு நீதிமன்ற பணியில் இருக்கும் சிஐஎஸ்எப் வீரர்களை அழைத்துச் சென்று தீபம் ஏற்றஉத்தரவு பிறப்பித்தார்.

இந்தசூழலில் நீதிமன்ற உத்தரவுபடி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, திரண்டிருந்த இந்து முன்னணி கட்சியினர் மற்றும் பாஜகவினர் தடுப்புகளை உடைத்துச் சென்றனர். இதனால் போலீசாருக்கும் இவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

16 கால் மண்டபத்திலிருந்து காவல்துறை வைத்திருந்த அனைத்து தடுப்புகளையும் தூக்கி எறிந்து மலை ஏற முயன்றதால் இந்த தள்ளுமுள்ளு உண்டானது. இதனால் இரண்டு காவலர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் காயம் ஏற்பட்டது.

இதனால் திருப்பரங்குன்றத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியிருக்கும் நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த மதுரை எஸ்.பி இந்து முன்னணியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

இன்னொரு பக்கம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவின்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்கா அருகே தீபம் ஏற்ற சி.ஐ.எஸ்.எப் படை வீரர்கள் 50 பேருடன் மனுதாரர் உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியினர் புறப்பட்டுள்ளனர்.

தற்போது திருப்பரங்குன்றம் மலை போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share