டெல்லியில் இருந்து வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், சேலத்தில் இருந்து சாலை வழியாக வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் இருவரும் நேற்று (பிப்ரவரி 25) ஒரே நேரத்தில் கோவை விமான நிலையத்திற்கு வந்ததால், இருக்கட்சி தொண்டர்கள் மத்தியிலும் பதற்றம் ஏற்பட்டது. tension hiked at kovai airport
பாஜக மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைப்பதற்காகவும், ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு 8.20 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
அதே போன்று சேலத்தில் நடைபெற்ற பாமக கெளரவத் தலைவர் ஜி.கே. மணி இல்ல திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, சாலை வழியாக வந்த முதல்வர் ஸ்டாலின், நேற்று மாலை 7.40 மணியளவில் கோவை விமான நிலையத்திற்குள் நுழைந்தார்.

ஏறக்குறைய இருவரும் ஒரே நேரத்தில் விமான நிலையத்திற்கு வந்த நிலையில், அமித் ஷாவை வரவேற்க பாஜக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் அங்கு வந்திருந்தனர். அதே போல தங்களது கட்சித் தலைவரை வழியனுப்பி வைக்க திமுகவினரும் நூற்றுக்கும் மேற்பட்ட கார்களில் அங்கு வந்தனர். இதனால் கோவை விமான நிலையமே பதற்றமானது.
மத்திய உள்துறை அமைச்சர் கோவை வருவதை முன்னிட்டு மாநகர கமிஷனர், சட்ட ஒழுங்கு ஏடிஜிபி, 5 துணை ஆணையர்கள், 4 ஏடிஎஸ்பி, 20 ஏசி, 49 இன்ஸ்பெக்டர்கள், 209 எஸ்.ஐ, 12 வெடிகுண்டு நிபுணர் குழு உட்பட 2393 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் ஒரே நேரத்தில் விமான நிலையத்திற்கு வந்த இரு தலைவர்களும் எங்கே சந்தித்து கொள்வார்களோ என இரு கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மத்தியிலும் டென்சன் ஏற்பட்டது.
விமான நிலையத்தின் வெளியில் காத்திருந்த இரு கட்சியை சேர்ந்த தொண்டர்களும் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியபடி இருந்தனர். எனினும், இருதரப்பினரும் உரசி கொள்ளாத அளவிற்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், வெளியில் வரக்கூடிய கார்களையும், உள்ளே செல்லக்கூடிய கார்களையும் சரியாக செல்வதற்கு வழிவகுத்து டென்சனை குறைத்தனர்.