திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
திமுக உட்கட்சி தேர்தலின் பொதுக்குழு அக்டோபர் 9-ஆம் தேதி சென்னையில் கூடி தலைமை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 72 மாவட்ட அமைப்புகளில் தென்காசி மாவட்டத்திற்கு மட்டும் நிர்வாகிகள் அறிவிக்கப்படாமல் இருந்தது.
இதனை தொடர்ந்து திமுக-வில் நிர்வாக வசதிக்காக, தென்காசி வடக்கு, தெற்கு ஆகிய மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டமன்ற தொகுதிகள், ஒன்றிய, நகர கழகங்கள் மறுசீரமைக்கப்பட்டன.
தென்காசி வடக்கு மாவட்டத்தில் சங்கரன்கோவில் (தனி) வாசுதேவநல்லூர் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், தென்காசி தெற்கு மாவட்டத்தில் கடையநல்லூர், ஆலங்குளம், தென்காசி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும் இடம்பெற்றன.
இந்நிலையில், தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து, கடந்த அக்டோபர் 21ஆம் தேதி மின்னம்பலத்தில் முடிவுக்கு வரும் தென்காசி வடக்கு திமுக பஞ்சாயத்து! மா. செ. ரெடி! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படி, திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளராக ஈ.ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
செல்வம்
