தற்காலிக ஆசிரியர் நியமனம்- தடையை நீக்க மதுரை உயர்நீதிமன்றம் மறுப்பு!

தமிழகம்

தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க மதுரை உயர்நீதிமன்றம்  இன்று (ஜூலை 5-22 ) மறுப்பு தெரிவித்து விட்டது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை  ஜூன் 23 ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது . ஆனால் இந்த நியமனத்தில் முறைகேடு நடக்க வாய்ப்பிருப்பதால் தடை செய்ய வேண்டும் என்று ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் சங்கத்தின் சார்பில்  மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம், பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் தகுதி அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென கோர்ட்டு கூறியதை ஏற்று , தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளில் தமிழக அரசு திருத்தம் செய்தது .

இந்த நிலையில்,  தமிழக அரசுத் தரப்பில்  இன்று  (ஜூலை 5) நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. “தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக் காலத் தடையை  நீக்க வேண்டும்” என்று தமிழக அரசு வழக்கறிஞர் முறையீடு செய்தார். அப்போது நீதிபதி எம்.எஸ். ரமேஷ், “ தற்காலிக ஆசிரியர்களை ஏன் நியமிக்க வேண்டும்?   தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க என்ன அவசரம்? அதற்குப் பதிலாக நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே?”  எனக் கேட்டு…  ஏற்கனவே பட்டியலிடப்பட்ட 8-ம் தேதியே  இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என உத்தரவிட்டார். 

இதனிடையே தற்காலிக ஆசிரியர்களுக்கான விண்ணப்பப்பதிவு நேற்று தொடங்கியது. நாளை மாலை 5 மணி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அரசு அறிவித்துள்ளது.  ஆனால், மதுரைஉயர் நீதிமன்றக் கிளையின் இடைக்காலத் தடை காரணமாக அதன் ஆளுகைக்குட்பட்ட 14 மாவட்டங்களில் தற்காலிக ஆசிரியர் பணிக்கான விண்ணப்பங்களை கல்வித் துறை அதிகாரிகள் வாங்க மறுத்துவிட்டனர்.  8 ஆம் தேதி நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படியே இந்த 14 மாவட்டங்களில் விண்ணப்பம் பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித் துறை வட்டாரங்களில் கூறுகிறார்கள். இதனால் விண்ணப்பதாரர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.