இந்திய மல்யுத்த கூட்டமைப்பை மத்திய அரசு சஸ்பெண்ட் செய்ததால் தற்காலிக நிர்வாக குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது. temporary team for wrestling federation
இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாட்டிற்காக பதக்கங்களை வென்ற வீரர்கள், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வந்தனர். இதனையடுத்து பிரிஜ் பூஷன் சரண் சிங் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
பின்னர் வீரர்களின் போராட்டம், பல்வேறு மாநில மல்யுத்த சங்கங்கள் தொடர்ந்த வழக்கு போன்ற காரணங்களால் பல முறை தள்ளிப்போன இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தல் டிசம்பர் 21-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. தேர்தல் நடைபெற்ற அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட்டது.
அதன்படி பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் ஆதரவாளரான சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா, வீரேந்திர் சிங் யாதவ் உள்ளிட்டோர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.
சாக்ஷி மாலிக், மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார். தொடர்ந்து தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பி அளிப்பதாகவும் வீரர்கள் அறிவித்தனர்.
வீரர்களின் கடுமையான எதிர்ப்பால் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை மத்திய அரசு கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்திய மல்யுத்த சம்மேளனத்தை நிர்வகிப்பதற்காக தற்காலிக குழுவை இந்திய ஒலிம்பிக் சங்கம் அமைத்துள்ளது.
இது குறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவர் மற்றும் நிர்வாகிகள் கூட்டமைப்பின் சட்டவிதிகளை மீறி தன்னிச்சையாக முடிவுகளை எடுத்துள்ளனர்.
ஐஓசி-யால் கடைப்பிடிக்கப்படும் சிறந்த நிர்வாகம் மற்றும் கொள்கைகளுக்கு எதிராகவும், விதிகளுக்குப் புறம்பாகவும் முடிவுகளை ரத்து செய்துள்ளதை இந்திய ஒலிம்பிக் சங்கம் சமீபத்தில் அறிய நேர்ந்தது.
அதனால், மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க தற்காலிக குழுவை நியமிக்கிறது. நியாயமான விளையாட்டு, பொறுப்பேற்பு, வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை புதிய நிர்வாகக் குழு உறுதி செய்யும்.
வீரர், வீராங்கனைகள் தேர்வு, சர்வதேச போட்டிகளில் வீரர்கள் பங்கேற்பதற்கான பதிவுகளை சமர்ப்பிப்பது, விளையாட்டுகளை ஒருங்கிணைப்பது, வங்கிக் கணக்குகளை கையாளுவது,
வலைத்தளத்தினை நிர்வகிப்பது மற்றும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் பிற நடவடிக்கைகளை இந்தக் குழு மேற்கொள்ளும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
எண்ணூர் வாயு கசிவு: போராட்டத்தை வாபஸ் பெற்ற மக்கள்
திகாரா? இல்ல தி.நகரா?: அப்டேட் குமாரு
temporary team for wrestling federation