சிறப்புக் கட்டுரை: வேற்றுமை பழகு!

Published On:

| By Balaji

ஜெயன்நாதன் கருணாநிதி – கே. ஆர். விக்னேஷ் கார்த்திக்

ஜனநாயகம் என்பதை பல்வேறு வகையில் புரிந்துகொள்ளலாம். அதில் ஒருவகை தொடர்ச்சியான கருத்து மோதல்களினால் உருவாகும் அதிகாரப் பகிர்வுக் கட்டமைப்புதான் ஜனநாயகம் என்பது. கருத்து அல்லது கொள்கை மோதல் என்பது ஜனநாயகத்தின் உட்கூறுகளில் ஒன்று. வெவ்வேறான பார்வைகளும் கருத்துகளும் அல்லது கொள்கைகளும் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும்போதுதான் ஜனநாயகம் செழித்து வளர முடியும். மாறாக கொள்கை சமரசங்களின் வழியாகப் பெறக்கூடிய வெற்றிகளும், அடையக்கூடிய இலக்குகளும், காலப்போக்கில் ஜனநாயகத்தின் பன்முகச் செழுமையைக் குன்றச் செய்யும்.

கருத்துகள் அல்லது கொள்கைகளின் மோதல்கள் அதன் இயல்பாக நடைபெற வேற்றுமையைப் பழக வேண்டும்.

பல்வேறு இனங்கள், மொழிகள், சமயங்கள் மற்றும் கலாச்சாரப் பின்னணிகள் கொண்ட ஒரு சமூகத்தில் வேற்றுமைகள் தோன்றுவது இயற்கை. அதிலும் குறிப்பாக சாதிப் படிக்கட்டினால் கட்டமைக்கப்படும் சமூகத்தில் வேற்றுமைகளுக்குப் பஞ்சமே இருக்காது. இதனால் கருத்து மோதல்களுக்கான சாத்தியங்கள் தோன்றியபடி இருக்கும். ஒருவகையில் அவ்வாறான மோதல் வெளியில்தான் சமூகம் முன் நகர்ந்து செல்ல முடியும்.

மோதல்கள் என்றாலே உடல் சார்ந்த வன்முறைகள் என்கிற புரிதலுக்கு நாம் வந்துவிட வேண்டியதில்லை. எதிரெதிர் கருத்துகளின் உரையாடல்கள் தொடங்கி போராட்டங்கள் வரை பல்வேறு வடிவங்களில் நிகழும் மோதல்களையே இங்கே நாம் குறிப்பிடுகிறோம். இந்த மோதல்கள் ஒற்றைத்துவமான சமரசத்தில் முடிந்தால் அதை Deliberative Democracy என்று அழைப்பர். அதே நேரம், அந்த மோதல்களின் முடிவில் அதில் பங்குகொண்டோரின் அடையாளம் மற்றும் தனித்துவத்துக்குப் பங்கம் வராமல், ஒரு சகவாழ்வை முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் தோன்றினால் அது Agonistic Democracy. நம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் சொல்லப்படும் வேற்றுமையில் ஒற்றுமை என்கிற கோட்பாட்டின் அடிப்படைத் தன்மையும் இதுதான்.

சென்ற நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தமிழ்ப் பேசும் பகுதிகளில் சுயமரியாதை இயக்கம் வளர்ந்ததை இதற்கு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். கலாச்சாரம், மொழி மற்றும் அரசியல் வெளியில் அதுவரை நிலவிவந்த ஆதிக்கத்துக்கு எதிராக, மேலாதிக்க கருத்து நிலைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மோதல்களின் விளைவாகத்தான் சுயமரியாதை இயக்கம் வளர்ந்தது. சமரசத்தின் வழியாக அல்ல. அன்று நிலவிவந்த சமூக மேலாதிக்க கருத்து வாதங்களோடு சமரசங்களை மட்டும் செய்தவாறு இருந்திருந்தால் சுயமரியாதை இயக்கம் வளர்ந்திருக்காது. அதன் விளைவுகளும் சாத்தியமற்றுப் போயிருக்கும்.

மலேசியாவிலும் வழிபாட்டு சர்ச்சை

முருகன் வழிபாடு தொடர்பான சர்ச்சைகள் எழுந்திருக்கிற இந்தச் சூழலில் மலேசிய நாட்டிலிருந்து ஓர் உதாரணத்தை சுட்டிக்காட்டுவது, காலத்துக்கும் வாதத்துக்கும் பொருத்தமானதாக இருக்கும். பினாங் நகரில் 1801இல் பிரிட்டானிய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்கள் அளித்த நிலத்தில், தென்னிந்தியாவில் இருந்து சென்றிருந்த பல சாதிக் குழுக்கள் சேர்ந்து மகா மாரியம்மன் கோயிலை எழுப்பினர். பின்னர் 1855இல் அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயில் எழுப்பப்பட்டது.

வருடாவருடம் மகா மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தைப்பூச ஊர்வலத்தில் பல சாதியினரும் கலந்து கொண்டனர். இத்தகைய சூழலில் 1875ஆம் ஆண்டு, அந்நகரில் உள்ள நாட்டுக்கோட்டை செட்டியார் சாதியினர், பினாங் மலையடிவாரத்தில் தங்கள் சாதிக்கென்று ஒரு மண்டபத்தைக் கட்டி, அதை விரிவுபடுத்தி கோயிலாக்கினர். பின்னர் இந்தியாவிலிருந்து வெள்ளித் தேரையும் வரவழைத்து, செட்டிப்பூசம் என்ற பெயரில் தேரோட்டத்தை தைப்பூச ஊர்வலத்துக்கு முதல் நாள் தங்கள் சாதியினருக்கென தனியாக நடத்த ஆரம்பித்தனர். நாட்டுக்கோட்டை செட்டியார்களின் இந்தச் செயல்பாட்டினை, பினாங் நகரில் அச்சாதியினரின் பொருளாதார அந்தஸ்தோடும் சமூக மேலாண்மையோடும் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. இத்தன்னிச்சையான செயல்பாடு பினாங் நகரில் சலசலப்பை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் பல சாதியினர் சேர்ந்து உருவாக்கிய மகா மாரியம்மன் கோயில் நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துவது யார் என்ற மோதலை நோக்கித் தள்ளியது. பின்னர் தைப்பூச ஊர்வலப் பாதையும் மாறியது. மகா மாரியம்மன் கோயில் தனித் தேரை வாங்கிய பிறகும் வழக்கமான தைப்பூச ஊர்வலப் பாதையில் அந்தத் தேரை இயக்க முடியாத சூழல் நிலவியது.

இந்தியாவில் நிகழ்ந்த ஆலய நுழைவு போராட்டத்தை அடியொற்றி, பினாங் நகரில் இருந்த தீண்டாமைக்குள்ளான ஒடுக்கப்பட்ட பட்டியல் சாதியினரும் கீழ்த்தட்டு இடைநிலை சாதியினரும் மலாயா திராவிடர் சங்கம் என்ற Pan Malayan Dravidian Association அமைப்பின் வழியாகவும், இந்து மகாஜன சங்கம் வழியாகவும் போராடியதன் வழியாக மேலாதிக்கத்தோடு மோதினர். முடிவில் 1933ஆம் வருடம், ஆலய நுழைவு உரிமையையும், பின்னர் ஊர்வலப் பாதையை மீட்டு மகா மாரியம்மன் கோயில் தேரை இயக்கும் சூழலையும் பெற்றனர். இங்கு நாம் நினைவில் கொள்ளவேண்டியது, இந்து மகாஜன சங்கமும், மலாயா திராவிடர் சங்கமும் அதனதன் வழியின் மேலாண்மையுடன் வாதிட்டு முடிவில் மறுக்கப்பட்ட உரிமையைப் பெற்றனர் என்பதே.

மேற்சொன்ன இரண்டு உதாரணங்களைப் போல வரலாறு நெடுக பல்வேறு உதாரணங்களை நம்மால் காட்ட முடியும். அசமத்துவ அமைப்பில் மேலாதிக்கத்தோடு நிகழ்த்தப்பட்ட மோதல்களின் விளைவாகவே பெரும்பான்மை மக்கள் உரிமை பெற்றார்கள் என்பதற்கு வரலாறும், நிகழ்காலமுமே சாட்சி.

மோதலில் பிறக்கும் தீர்வு

மோதலில் பிறக்கும் தீர்வைக்கொண்டுதான் உருவாகிவரும் பன்முகத்தன்மை கொண்ட ஓர் அமைப்பைக் காப்பாற்ற முடியும். சமரசங்கள் பெருகுகிறபோது, ஒரு கருத்து மெல்ல மெல்ல மேலாதிக்கம் பெற்று, பன்முகத்தன்மை சிதைந்து வழக்கொழிந்து போய்விடும் சாத்தியம் இருக்கிறது.

அதேநேரம் மேலாதிக்கத்தோடு ஒன்று சேர்ந்து மோதும் பல்வேறு அமைப்புகளின் தனித்தன்மையை மோதல் பாதிக்காது. பொதுவான வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இணைந்து செயலாற்றவும் பின்னர் பிரிந்து செயலாற்றவுமான சுதந்திரம் மோதல் வழி ஜனநாயக போராட்டத்தில் உண்டு.

மீண்டும் மலேசிய உதாரணத்துக்கே வருவோம்.

போராட்டத்தின் வழியாக ஆலய நுழைவு உரிமையைப் பெற்ற பிறகு, இந்து மகாஜன சங்கம், 1935இல் பினாங்கின் முக்கிய கோயில்களான மகா மாரியம்மன் கோயிலின் நிர்வாகத்தையும் அருள்மிகு பாலதண்டாயுதபாணி கோயிலின் நிர்வாகத்தையும் தன்வயப்படுத்தி, சாதி மற்றும் பொருளாதார மேலாண்மையைக் கேள்விக்குள்ளாக்கியது. அதேபோல் மலாயா திராவிட சங்கம் வழி வந்த தமிழ் சீர்திருத்தச் சங்கமோ, பின்னர் தைப்பூச விழாவில் அபாயகரமான முள் காவடி எடுப்பதைச் சாடிக்கொண்டே இருந்தது.

மேலாதிக்கத்தோடு ஒன்று சேர்ந்து மோதிய இரண்டு அமைப்புகள், மோதலின் வெற்றிக்குப் பிறகு தங்கள் தனித்தன்மை மாறாமல் செயல்பட்டதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று. ஆனால், சமரசத்தின் வழியாக எட்டப்படும் தீர்வில் பன்முகத்தன்மையும், தனித்துவமும் நீடித்து நிலைக்க சாத்தியமில்லை. இவை இரண்டும் பலியாகிற ஓர் அமைப்பில் ஜனநாயகம் செழித்து வளர வாய்ப்பே இல்லை.

ஆனால், பொதுபுத்தியில் இதற்கு நேர்மாறான எண்ணம் விதைக்கப்பட்டிருக்கிறது. ஜனநாயகத்தில் சமரசங்களின் வழி அடையக்கூடிய தீர்வு (Delibrative Democracy) உயர்வானதென்றும், மோதல்களின் வழியான தீர்வு (Agonistic Democracy) தவறானதென்றும் நம்பப்படுகிறது.

இந்தப் பொதுபுத்தியை, சாந்தால் மௌஃப் என்ற பெல்ஜிய அரசியல் கோட்பாட்டாளரின் கருத்து மறுக்கிறது.

ஜனநாயகத்தில் சமரசங்களின் வழியாக ஒருமித்த கட்டமைப்பை உருவாக்குவது, நடப்பில் இருக்கின்ற போதாமைகளைப் பற்றி விவாதிப்பதற்கான இடத்தை அளிக்காது என்கிற வாதத்தை அவர் முன்வைக்கிறார்.

அதுமட்டுமல்லாது, அந்த சமரசங்கள் வழியாக உருவாக்கப்படும் ஒருமித்த கட்டமைப்பில், அதில் சம்பந்தப்பட்டவர்களிடையே ஒரு சார்பினரின் கருத்துகள் மேலாண்மை பெறுவதால் மற்றவர்களை அவர்கள் கட்டுப்படுத்தும் விதத்தில் இருக்கும் என்றும் கூறுகிறார்.

ஆக, ஜனநாயகத்தில் சமரசத்தின் வழியான தீர்வென்பது பொதுபுத்தி அளவில் வரவேற்கத் தகுந்ததாகப் பார்க்கப்பட்டாலும், அது விவாதத்துக்கான வெளியினை சுருக்குவதாகவே இருக்கும் என்கிறார் மௌஃப். மேற்சொன்ன உதாரணங்கள் வழியாக நாம் கண்டடைந்ததும் கூட அதுவே.

தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை கோரியும், தமிழில் வழிபடும் உரிமை கோரியும் மேலாதிக்கத்தோடு நிகழ்த்தப்படும் மோதலையும் இதனோடு பொருத்திப் பார்க்கலாம். பகுத்தறிவு இயக்கங்களும், சமய சான்றோர்களும் சேர்ந்தே இந்த மோதலை நிகழ்த்துகின்றனர். வெற்றிக்குப் பின்னர் இரண்டு தரப்புகளும் தங்கள் தனித்தன்மை மாறாமல் பணியாற்ற முடியும்.

எனவே, பன்முகத்தன்மையையும், தனித்தன்மையையும் காப்பாற்றி உரிமைகளைப் பெறுவதற்கு, மேலாதிக்கத்தோடு மோதி ஜனநாயகத்தை செழுமைப்படுத்த வேண்டும்.

அதற்கு கடைப்பிடிக்க வேண்டிய கோட்பாடு ‘வேற்றுமை பழகுதல்’.

கட்டுரையாளர் குறிப்பு : ஜெயன்நாதன் கருணாநிதி, சென்னையில் வசிக்கும் அரசியல் நோக்கர். கே.ஆர். விக்னேஷ் கார்த்திக், லண்டன் கிங்ஸ் கல்லூரியின் ஆய்வு மாணவர்.

நன்றி: சூர்யா கிருஷ்ணமூர்த்தி, கும்பகோணம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share