ADVERTISEMENT

கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தக் கூடாதா? உச்ச நீதிமன்றம் அதிரடி!

Published On:

| By Kavi

Temple funds can be used for education

கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தினால் என்ன தவறு என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. எந்த கோயில் நிதியில் இருந்தும் பொது பயன்பாட்டுக் கட்டிடங்கள் கட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், உச்ச நீதிமன்றம் மற்றொரு வழக்கில் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் சார்பாக கலை, அறிவியல் கல்லூரி அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக கொளத்தூர் சோமநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான 2.50 ஏக்கர் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

ADVERTISEMENT

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.  ஆனால் கல்லூரி கட்டுவதற்கான அறநிலையத் துறை ஆணையரின் அறிவிப்பாணையை ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம், டி.ஆர்.ரமேஷின் மனுவை தள்ளுபடி செய்தது. 

இதை எதிர்த்து  டி.ஆர்.ரமேஷ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். 

ADVERTISEMENT

இந்த மனு  உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வில் இன்று (ஆகஸ்ட் 29) விசாரணைக்கு வந்தது. 

அப்போது மனுதாரர் ரமேஷ் சார்பில், ’கல்லூரி கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடம் கொளத்தூர் சோமநாத் ஆலயத்தின் இடமாகும். கோயில் நிதியையும் கல்லூரிக்காக பயன்படுத்துகின்றனர். எனவே கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. 

ADVERTISEMENT

அறநிலையத்துறை சார்பில், ‘சோமநாத் ஆலயத்தின் இடத்தில் கல்லூரி கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும் அந்த இடத்துக்கு 3.19 லட்சம் ரூபாயை அரசு வாடகையாக வழங்கி வருகிறது. அந்த இடத்தை வாடகை இல்லாமல் இலவசமாக பயன்படுத்தவில்லை. கபாலீஸ்வரர் கோயிலின் சார்பில் தான் கல்லூரி அமைக்கப்பட இருக்கிறது. கல்விக்காகத்தான் அந்த இடத்தை பயன்படுத்துகிறோம்’ என்று வாதம் முன்வைக்கப்பட்டது. 

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘ மாணவர்களின் எதிர்காலத்துக்காக தான் கல்லூரிக்கான கட்டமைப்பை அறநிலையத்துறை ஏற்படுத்துகிறது. அதற்காகத்தான் நிதியையும் பயன்படுத்துகிறார்கள். கல்விக்காக கோயில் இடத்தையும் நிதியையும் பயன்படுத்துவதில் என்ன தவறு இருக்கிறது’ என்று கேள்வி எழுப்பி அரசுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தனர். 

இந்த உத்தரவின்போது கபாலீஸ்வரர் கோயில் நிதியை கல்விக்கு பயன்படுத்துவதில் தவறு இல்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். 

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கோயில் நிதி தொடர்பாக ஒரு உத்தரவை பிறப்பித்தது. 

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த செந்தில்குமார் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். 

அதில், ‘கோயில்களுக்கு சொந்தமான நிதியிலிருந்து வணிக கட்டிடங்கள், கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் அமைக்க அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டது. 

கோயில் நிதியை இந்து மத கொள்கைகளை பரப்புதல், அர்ச்சகர் ஓதுவார் பள்ளிகளை நிறுவுதல், இந்து மத தத்துவம் மற்றும் சாஸ்திரங்களை ஆய்வு செய்தல், கோயில் கட்டிடக்கலை பயிற்றுவிக்கும் கல்லூரிகளை நிறுவுதல், பக்தர்களுக்காக மருத்துவமனை மருந்தகங்கள் நிறுவ பயன்படுத்துதல் ஆகியவற்றுக்காக பயன்படுத்த வேண்டும். 

மாறாக திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் அமைக்க கூடாது. இதற்கான அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். 

அரசின் அறிவிப்பு அறநிலையத் துறை சட்டத்திற்கு புறம்பானது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் அருள்முருகன் அமர்வு நேற்று (ஆகஸ்ட் 28) விசாரித்தது. 

அப்போது நீதிபதிகள், ‘ பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து கோயில்களுக்கு வசூலிக்கப்படும் நிதி, திருவிழாக்கள் நடத்துவது, கோயில்கள் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்காக தான் வழங்கப்படுகிறது. 

எனவே கோயில் நிதியை பொது அல்லது அரசு நிதியாக கருத முடியாது. பொது நோக்கங்களுக்காக பயன்படுத்த முடியாது. 

ஏற்கனவே பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிதி தொடர்பான வழக்கில், கோயில் நிதியில் வணிக நோக்கில் திருமண மண்டபங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் அமைப்பது அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது என்று கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

இந்த உத்தரவு இந்த வழக்கிற்கும் பொருந்தும். எனவே கோயில் நிதியில் வணிக வளாகம், கல்வி நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் அமைக்கும் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவு பிறப்பித்தனர்.

மேலும், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இதே உத்தரவை பிறப்பித்தனர். 

கோயில் நிதியை அரசு நிதியாக கருத முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள் அந்த நிதியை, மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வணிக நோக்கில் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிட்டனர். 

இந்த இரு உத்தரவுகள் வெளியான மறுதினமே கோயில் நிதியை கல்விக்காக பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share