தெலங்கானா மாநிலம் மகபூபாத் மாவட்டம் கோடாட் நகரத்தில் 17 வயது இளம் பெண் ஒருவர் கல்லூரியில் படித்து வந்துள்ளார் . இந்த பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்துள்ளார். காதலை ஏற்க மறுத்த அந்த பெண் தன் பின்னால் வீணாக சுற்ற வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். ஆனால், இளைஞர் கேட்கவில்லை.
அதோடு, தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து, அந்த பெண்ணை விடாமல் துரத்தி துரத்தி டார்ச்சர் தந்துள்ளார். ஒருகட்டத்தில் இவர்களின் துன்புறுத்தல் தாங்க முடியாமல், அந்த பெண் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று விஷம் குடித்து விட்டார். பெற்றோர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும், அவரது உடல்நிலை மோசமடைந்து கொண்டே சென்றது.
இந்த நிலையில், ரக்ஷா பந்தன் தினத்தில் தான் எப்படியும் இறந்துவிடுவோம் என்பதை அந்த பெண் உணர்ந்துள்ளார். இதையடுத்து, இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, தன்னுடைய இரு சகோதரர்களுக்கும் கையில் ராக்கி கட்டிவிட்டார். அப்போது, தங்கள் பெற்றோரை நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் சகோதரர்களிடத்தில் சத்தியமும் வாங்கிக் கொண்டார்.
தொடர்ந்து, சில நிமிடங்களில் அந்த பெண்ணின் உயிரும் பிரிந்தது..அந்த பெண்ணுக்கு இறுதிச்சடங்கு நடந்தபோது, சகோதரர்கள் உட்பட ஒட்டுமொத்த குடும்பமே கண்ணீர்விட்டு கதறியது, காண்போரை கண் கலங்க வைத்தது.
இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த பெண்ணை, தொடர்ந்து லவ் டார்ச்சர் தந்து தற்கொலை செய்ய தூண்டியவர்களை நரசிம்ஹுல்பேட்டை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
