தெலங்கானா மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் உத்தரவை பிறப்பித்துள்ளார் முதல்வர் சந்திரசேகர ராவ்.
தெலங்கானா மாநிலத்தில் பதுக்கம்மா, தசரா திருவிழாக்கள் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் போக்குவரத்து கழகத்தை அரசுடன் இணைத்து, அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களுக்கு புதிய ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4ஆம் தேதி நள்ளிரவு முதல் தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களின் கோரிக்கையை விரைந்து பரிசீலிப்பதாகவும், உடனடியாக பணிக்கு திரும்பும்படியும் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், இதனை நிராகரித்த போக்குவரத்து ஊழியர்கள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விழா நேரத்தில் சுமார் 50,000 ஊழியர்கள் வரை போராட்டத்தில் பங்கேற்றதால் மாநிலம் முழுவதும் போக்குவரத்து முடங்கி பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
இதனையடுத்து, சனிக்கிழமை மாலைக்குள் அனைத்து ஊழியர்களும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சந்திரசேகர ராவ் எச்சரித்தார். இருப்பினும் வெறும் 200 ஊழியர்கள் மட்டுமே மீண்டும் பணிக்கு திரும்பினர்.
வேலைநிறுத்தம் தொடர்பாக உயரதிகாரிகளுடன் முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, 48,000 போக்குவரத்து ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து தெலங்கானா முதல்வர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “விழா நேரத்தில் இவ்வாறு வேலை நிறுத்தம் செய்து பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துவது மன்னிக்க முடியாத குற்றம் ஆகும். தற்போது தெலங்கானா போக்குவரத்து கழகம் ரூ.1,200 கோடி நஷ்டத்தில் இயங்கிவருகிறது. தற்போது அது ரூ.5,000 கோடியாக அதிகரிக்கக் கூடும்” என்று தெரிவித்துள்ளார்.பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் பணியிடங்களுக்கு புதிய பணியாளர்கள் விரைவில் நியமிக்கப்படுவர் என்றும், புதிதாக பணியில் சேருபவர்கள் எந்த தொழிற்சங்கத்திலும் சேரமாட்டோம் என்று உறுதியளித்த பின்னரே பணியில் இணைத்துக்கொள்ளப்படுவர் என்றும் தெரிவித்தார்.
திருவிழா அவசரத்திற்காக கூடுதலாக 2,500 பேருந்துகளை வாடகைக்கு இயக்க தெலங்கானா அரசு அனுமதித்துள்ளது. மேலும் தனியார் பேருந்துகள் கூடுதலாக பேருந்துகளை இயக்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
