டிலிமிட்டேஷன்… ஸ்டாலின் எஃபெக்ட்! தெலங்கானா சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

Published On:

| By Aara

மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவருமாறு தெலங்கானா சட்டமன்றம் இன்று (மார்ச் 27) தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

கடந்த மார்ச் 22 ஆம் தேதி மக்களவைத் தொகுதி மறு வரையறை தொடர்பாக  ஏழு மாநிலங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கலந்துகொண்டு மக்கள் தொகை அடிப்படையில் மறு வரையறை செய்தால் தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தார். Telangana Resolution on delimitation

மேலும், கூட்டு நடவடிக்கைக் குழுவின் அடுத்த கூட்டத்தை தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் நடத்தவும் அவர் விருப்பம் தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று தெலங்கானா சட்டமன்றத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்த விவகாரம் தொடர்பாக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.

அதில்,  

“மாநிலங்களுடன்  வெளிப்படையான ஆலோசனைகள் இல்லாமல், வரவிருக்கும் எல்லை நிர்ணயம் எவ்வாறு திட்டமிடப்படுகிறது என்பது குறித்து இந்த அவை தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்துகிறது.

மக்களவைத் தொகுதி மறுவரையறை என்பது  அனைத்து மாநில அரசுகள், அனைத்து அரசியல் கட்சிகளுடன்  விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு வெளிப்படையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சபை வலியுறுத்துகிறது.

மத்திய அரசால் முன்னெடுக்கப்படும் மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை திறம்பட செயல்படுத்திய மாநிலங்கள், அதன் விளைவாக மக்கள்தொகைப் பங்கு குறைந்துள்ளதால், அவை தண்டிக்கப்படக்கூடாது. எனவே, மக்கள்தொகை மட்டுமே எல்லை நிர்ணயத்திற்கான ஒரே அளவுகோலாக இருக்கக்கூடாது. Telangana Resolution on delimitation

தேசிய மக்கள்தொகை நிலைப்படுத்தலை நோக்கமாகக் கொண்ட 42வது, 84வது மற்றும் 87வது அரசியலமைப்புத் திருத்தங்களுக்குப் பின்னால் உள்ள நோக்கம் இன்னும் அடையப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, மாநிலத்தை ஒரு அலகாகக் கொண்டு, நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லைகளை மறுவரையறை செய்வது, சமீபத்திய மக்கள்தொகைக்கு ஏற்ப எஸ்சி மற்றும் எஸ்டி இடங்களை முறையாக அதிகரிப்பது மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்குவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.

மேலும், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பொருட்டு, ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம், 2014 மற்றும் சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநில சட்டமன்றத்தில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை உடனடியாக 119 இலிருந்து 153 ஆக அதிகரிக்க வேண்டும் என்று அவை தீர்மானிக்கிறது. இதற்காக தேவையான அரசியலமைப்புத் திருத்தங்களை அறிமுகப்படுத்துமாறு மத்திய அரசை இந்த அவை வலியுறுத்துகிறது” என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share