ஊழல் பணத்தில் தாய்லாந்தில் மகனுக்கு திருமணம்.. மலைக்க வைக்கும் சொத்துகள்! சிக்கிய தெலுங்கானா இன்ஜினியர்!

Published On:

| By Minnambalam Desk

Telangana

தெலுங்கானா மாநிலத்தின் சர்ச்சைக்குரிய காலேஸ்வரம் பாசனத் திட்ட ஊழலில் தொடர்புடையதாக கூறப்படும் அம்மாநில அரசின் எக்ஸ்கியூடிவ் இன்ஜினியர் நுனே ஶ்ரீதரின் ( Nune Sridhar) சொத்து விவரங்களும் சொகுசு வாழ்க்கையும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. Telangana Engineer Caught

தெலுங்கானா மாநிலத்தின் காலேஸ்வரம் பாசனத் திட்டம் என்பது கோதாவரி ஆற்றின் குறுக்கே மேற்கொள்ளப்படுகிறது. இது நாட்டிலேயே மிகப் பெரிய பாசன திட்டமாகும். ரூ.1 லட்சம் கோடியில் பல்வேறு கட்டங்களாக இத்திட்டம் செயல்படுத்தப்படும் இந்த பாசனத் திட்டத்திற்காக கட்டப்பட்ட தடுப்பணைகள் சேதமடைந்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது. 2023-ம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலின் போது காலேஸ்வரம் பாசனத் திட்டத்தில் ஊழல் நடந்ததாக கிளம்பிய புகார்கள் ஆட்சியில் இருந்த பிஆர்எஸ் அரசு அதிகாரத்தை பறிகொடுக்க காரணமாகவும் இருந்தது.

மேலும் காலேஸ்வரம் பாசனத் திட்ட முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி பிசி கோஷ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை ஆணையம் முன்பாக முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஆஜராகி இருந்தார்.

இந்த நிலையில் காலேஸ்வரம் திட்ட ஊழலில் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படுகிற 16 அதிகாரிகளில் ஒருவரான அம்மாநில அரசின் எக்ஸ்கியூடிவ் இன்ஜினியர் நுனே ஶ்ரீதர் தொடர்புடைய 13 இடங்களில் ஜூன் 10-ந் தேதி மாநில ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. நுனே ஶ்ரீதர் தமது மகனுக்கு தாய்லாந்தில் பல கோடி ரூபாய் செலவழித்து ஆடம்பரமாக திருமணத்தை நடத்தி இருக்கிறார். சொகுசு பங்களாக்கள், வில்லாக்கள், குடியிருப்புகள், சொகுசு நட்சத்திர ஹோட்டல்கள், விளை நிலங்கள் என நாட்டின் மிகப் பெரிய தொழிலதிபர்களைப் போல, தெலுங்கானா மாநிலத்தின் அரசு அதிகாரியான நுனே ஶ்ரீதர் சொத்துகளைக் குவித்து வைத்திருப்பதை கண்டுபிடித்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் நுனே ஶ்ரீதரிடம் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், வங்கி டெபாசிட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், நுனே ஶ்ரீதர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். நுனே ஶ்ரீதரின் இந்த சொத்து விவரங்கள்தான் இப்போது தெலுங்கானாவில் பேசுபொருளாக இருக்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share