இங்கிலாந்தின் பிர்மிங்காம் மைதானத்தில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தி சரித்திர சாதனை படைத்தது. பிர்மிங்காம் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது. India Cricket
பிர்மிங்காம் டெஸ்ட் கிரிக்கெட் வெற்றியின் மூலம் நிகழ்த்தப்பட்ட சாதனைகள்:
- 1967-ம் ஆண்டு முதல் பிர்மிங்காம் மைதானத்தில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7-ல் தோல்வியைத் தழுவியது இந்திய அணி. ஒரு போட்டி டிராவில் முடிந்தது. தற்போது 58 ஆண்டுகளுக்கு பின்னர் வெற்றியை அறுவடை செய்துள்ளது இந்திய கிரிக்கெட் அணி
- பிர்மிங்காம் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் வென்ற முதலாவது ஆசிய அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது இந்திய அணி. இந்த மைதானத்தில் பாகிஸ்தான் 8 போட்டிகளில் விளையாடி தோல்வியடைந்துள்ளது. இலங்கை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி தோற்றது.
- பர்மிங்காம் மைதானத்தில் டெஸ்ட் போட்டி விளையாடிய முதலாவது ஆசிய அணி பாகிஸ்தான். 1962-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் இந்த மைதானத்தில் விளையாடியது.
- 1986-ம் ஆண்டு கபில்தேவ் இந்திய கேப்டன் பொறுப்பில் இருந்த போது இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் 279 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. தற்போது 336 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது.
- வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி அதிக ரன்கள் வித்தியாசத்தில் முதல் முறையாக தற்போதுதான் வெற்றி பெற்றுள்ளது. 2019-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிராக 318 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றதுதான் இதுவரை சாதனையாக இருந்தது.
- இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு இதுவரை 37 பேர் கேப்டன்களாக இருந்துள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் வெற்றி வாகை சூடிய 25-வது இந்திய கேப்டன் சுப்மன் கில்.
- இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 600 ரன்களை கடந்திருப்பது இது 2-வது முறை. முதல் முறையாக 600 ரன்களை கடந்த நிலையில் வெற்றி பெற்றுள்ளது இந்திய அணி
- இந்திய அணியின் ஆகாஷ் தீப் 41.4 ஓவர்கள் பந்து வீசி 187 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதற்கு முன்னர் இதே பர்மிங்காம் மைதானத்தில் 1986-ல் இந்திய அணியின் சேட்டன் சர்மா 53.3 ஓவர்கள் பந்து வீசி 188 ரன்கள் கொடுத்து 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இருந்தார்.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் சேட்டன் சர்மாவுக்குப் பின்னர் 10 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஆகாஷ் தீப்
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 6 அல்லது 6-க்கும் அதிகமான விக்கெட்டுகளை கைப்பற்றிய 6-வது இந்திய பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் ஆகாஷ் தீப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் இஷாந்த் சர்மா, அமர் சிங், சேட்டன் சர்மா, முகம்மது சிராஜ் மற்றும் புவனேஷ் குமார் இந்த சாதனையை நிகழ்த்தி இருந்தனர்.
- டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்த இந்திய வீரர் (430) என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் கேப்டன் சுப்மன் கில். இதற்கு முன்னர் 1971-ல் சுனில் கவாஸ்கர், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் மொத்தம் 344 ரன்களைக் குவித்திருந்தது சாதனையாக இருந்தது
