சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராட்டம்.. சென்னையில் ஆசிரியர்கள் கைது!

Published On:

| By Pandeeswari Gurusamy

சென்னையில் சமவேலைக்கு சம ஊதியம் கோரி 25ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையின் அரசு தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல ஆண்டுகளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில் கடந்த டிசம்பர் 26 முதல் சென்னையில் பல கட்ட தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT

ஏற்கனவே இடைநிலை ஆசிரியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தங்களது கோரிக்கையை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் உறுதியாகத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 25 ஆவது நாளாக இன்று சென்னை கோட்டையில் ரயில் நிலையம் அருகே போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதேபோல், தமிழக அரசுப் பள்ளிகளில் தையல், ஓவியம், கணினி, உடற்பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் 2012-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். தொடக்கத்தில் அவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், தற்போது ரூ.12,500 வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியத்தை ரூ.12,500-லிருந்து ரூ.15,000-ஆக உயர்த்துவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொங்கலுக்கு முன்னர் அறிவித்தார். ஏற்கனவே கடந்த 13 ஆண்டுகளாக மே மாதம் ஊதியம் வழங்கப்படாத நிலையில், இனி அந்த மாதத்தில் ரூ.10,000 வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.எனினும், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னை திருவள்ளுவர் கோட்டம் அருகே ஆசிரியர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர் அவர்களைக் கைது செய்தனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share