தொடர் போராட்டம் : ஆசிரியர்கள் மயக்கம்!

Published On:

| By vanangamudi

Teachers involved in protest

ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட 288 ஆசிரியர்கள் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் 4 ஆசிரியர்கள் இன்று (ஏப்ரல் 5) மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. Teachers involved in protest

புதுச்சேரியில் 2020 காங்கிரஸ் ஆட்சியின்போது பள்ளிக்கல்வித் துறையில் காலியாக இருந்த ஆசிரியர் பணியிடங்களுக்கு நிதி சுமை இருப்பதாக கூறி 288 ஆசிரியர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து 2021 ஆம் தேர்தலுக்குப் பிறகு என்.ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது. ஒவ்வொரு வருடமும் ஆசிரியர்களுக்கு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் இதனை அவர்கள் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனிடையே கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் துறையின் அமைச்சர் நமச்சிவாயம் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அறிவித்திருந்தார்.

ஆனால் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் ஒப்பந்தம் மார்ச் மாதத்துடன் முடிந்து விட்டதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் சட்டபேரவையில் அமைச்சர் அறிவித்தது போல் தங்களுக்கு பணி நிரந்தர ஆணையை வழங்க வலியுறுத்தி சட்டப்பேரவை பின்புறம் சாலையில் அமர்ந்து தங்களுக்கு பணி நிரந்தரம் வழங்கும் வரை வீட்டுக்கு செல்ல மாட்டோம் எனக் கூறி கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அவர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் தெரிவித்தனர்.

ஆனால் தங்களை பணி நிரந்தரம் செய்யும் வரை கலைந்து செல்ல மாட்டோம் என தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண் ஆசிரியர்கள் மயக்கமடைந்தனர்.

அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பணி கேட்டு கடந்த 3 நாட்களாக ஒப்பந்த ஆசிரியர்கள் போராடி வரும் நிலையில் 4 ஆசிரியர்கள் மயக்கமடைந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டிலும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சரண்டர் விடுப்பு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். வரும் ஏப்ரல் 25ஆம் தேதி சென்னையில் 8000 பேர் கூடுமளவுக்கு போராட தயாராகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Teachers involved in protest

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share