தமிழகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 4) பட்டதாரி ஆசிரியர் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 41,485 பேர் எழுதுகின்றனர்.
கடந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 582 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பானது வெளியிடப்பட்டது.
ஜனவரி 7-ஆம் தேதி நடைபெறவிருந்த கட்டாயத் தமிழ் தகுதித்தேர்வு புயல், மழை காரணமாக பிப்ரவரி 4-க்கு தள்ளிவைக்கப்பட்டது.
கட்டாயத் தமிழ் தகுதித்தேர்வில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிரதான தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்படுவர் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பணி நிபந்தனைகள் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் கட்டாயத் தமிழ்தகுதித்தேர்வில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக்கோரி மொழி சிறுபான்மை விண்ணப்பதாரர்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர்கள் தரப்பில் கே.இளங்கோ ஆஜராகி, “தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளை தாய்மொழியாக கொண்டவர்கள் மற்றும் மொழி சிறுபான்மையின விண்ணப்பதாரர்கள் தமிழ் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் ஓராண்டாவது அவகாசம் வழங்க வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.
அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, “சட்ட திருத்தம் கொண்டு வந்து ஓராண்டுக்கு மேலாகிவிட்டது. அதன் அடிப்படையில்தான் இந்தபோட்டித்தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்கக்கூடாது” என வாதிட்டனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “கடைசி நேரத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. தற்போது இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அது தேர்வு நடைமுறைகளை பாதிக்கும். தமிழக அரசுதான் முடிவு செய்ய முடியும். இந்த வழக்கில் தமிழக அரசு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் பதிலளிக்க வேண்டும்” என உத்தரவிட்டு வழக்கின் விசாரணை விசாரணையை மார்ச் 7-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் இன்று பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் நிலையில், உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மொழி சிறுபான்மையினர் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விளையாட்டு அரங்குகளை மேம்படுத்த ரூ.25 கோடி: எந்தெந்த இடங்களில்?
அமைச்சர்கள் சூமோட்டோ வழக்கு: தலைமை நீதிபதியிடம் முன் அனுமதி பெறாமல் விசாரணை!