ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெறும் தேதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (செப்டம்பர் 23) வெளியிட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 25ம் தேதி முதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள், நிர்வாகக் காரணங்களினால் தள்ளிவைக்கப்படுவதாக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் தெரிவித்தது. பின்னர் இத்தேர்வு, செப்டம்பர் 10 முதல் 15 வரை நடத்தப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து இன்று (செப்டம்பர் 23) தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித் தேர்வு நடைபெறும் தேதியை அறிவித்துள்ளது. அதன்படி, முதல் தாள் அக்டோபர் மாதம் 14 ஆம் தேதி தொடங்கி 20 ஆம் தேதி வரை காலை, மாலை என இரண்டு வேளைகளிலும் தேர்வு நடைபெறவுள்ளது.
தேர்வு அட்டவணை மற்றும் அனுமதிச் சீட்டு குறித்த விவரம் அக்டோபர் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும் என்று அது அறிவித்துள்ளது. இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும் தேதி, முதல் தாள் தேர்வு முடிந்த பிறகு அறிவிக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
கணினி வழித்தேர்விற்காக பயிற்சி தேர்வு மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தேர்வர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம் எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாளை 2 லட்சத்து 30 ஆயிரத்து 278 பேரும், இரண்டாம் தாளை 4 லட்சத்து 1 ஆயிரத்து 885 பேரும் என மொத்தமாக 6 லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
மோனிஷா
