அதிகரித்துள்ள தேயிலை மகசூல்: மகிழ்ச்சியில் விவசாயிகள்!

Published On:

| By admin

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக பெய்த மழை காரணமாக தேயிலை மகசூல் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் தேயிலை விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள் என்பதால், சிறிய அளவிலான தோட்டங்களே வைத்துள்ளனர்.
இவர்கள் நாள் தோறும் தங்களது தேயிலை தோட்டங்கள் பசுந்தேயிலை பறித்து அரசு மற்றும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளுக்கு வழங்கி வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்தே வாழ்க்கையை ஓட்டி வருகின்றனர்.
பொதுவாக நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் துவங்கி இரு மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதேபோல், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும்.
இச்சமயங்களில் தேயிலை மகசூல் அதிகரிக்கும். இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை பனி பொழிவு மற்றும் வெயிலின் காரணமாக தேயிலை மகசூல் குறையும். இச்சமயங்களில் தேயிலை மகசூல் குறையும். ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, ஊட்டி மற்றும் மஞ்சூர் போன்ற பகுதிகளில் கூடுதல் மழை கிடைக்கிறது. இதனால், இப்பகுதிகளில் கோடைக்காலங்களிலும் தேயிலை மகசூல் கூடுதலாக கிடைக்கிறது. இம்முறை கடந்த ஏப்ரல் மாதம் துவங்கிய மழை இரு மாதங்களுக்கு மேலாக பெய்து வருகிறது. இதனால், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, ஊட்டி மற்றும் மஞ்சூர் போன்ற பகுதிகளில் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து, தென்மேற்கு பருவமழை பெய்தால், தேயிலை மகசூல் அதிகரிக்க வாயப்புள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

**-ராஜ்**

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share