வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி தேயிலை விவசாயிகள் போராட்டம்!

Published On:

| By admin

நீலகிரி மாவட்டத்தில் 12 லட்சம் கிலோ பச்சை தேயிலை தேக்கம் அடைந்துள்ள நிலையில், கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயம் செய்யக்கோரி வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி தேயிலை விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. சிறு, குறு தேயிலை விவசாயிகள் 65,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். நீலகிரி முழுவதும் 35,000 ஏக்கர் பரப்பளவில் தேயிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கோடை மழை வழக்கத்தை விட அதிகமாக பெய்தது. இதனால் நல்ல சீதோஷ்ண நிலை நிலவியதால், பச்சை தேயிலை மகசூல் அதிகரித்து உள்ளது. தற்போது தேயிலை அறுவடை அதிகமாக இருக்கிறது.

ADVERTISEMENT

இந்த நிலையில் தேயிலை தொழிற்சாலைகளுக்கு, பச்சை தேயிலை வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், வாரத்துக்கு மூன்று நாட்கள் மட்டும் கோட்டா முறையில் தேயிலை கொள்முதல் செய்யப்படுகிறது. சில தொழிற்சாலைகள் தேயிலை கொள்முதலை நிறுத்திவிட்டது. இதனால் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு விநியோகிக்க முடியாததால் தேக்கம் அடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் வீணாக கீழே கொட்டி வருகிறார்கள். இதன் காரணமாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று தேயிலை கொள்முதல் செய்ய நடவடிக்கை கோரியும், பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தியும் நீலகிரி மாவட்டம் முழுவதும் வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். மேலும் தொழிற்சாலைகளுக்கு தேயிலை விநியோகிப்பதைப் புறக்கணித்தனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து பேசியுள்ள நீலகிரி மாவட்ட சிறு விவசாயிகள் சங்க தலைவர் போஜன், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த பல ஆண்டுகளாக தேயிலைக்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.30 விலை நிர்ணயம் செய்ய வேண்டும். தேயிலைக்கு மானியம் வழங்க வலியுறுத்தியும் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். போராட்டம் காரணமாக 12 லட்சம் கிலோ பச்சை தேயிலை தேக்கம் அடைந்துள்ளது” என்றார்.

இந்த நிலையில் ஊட்டிக்கு வருகை தந்த மத்திய அரசின் விமான போக்குவரத்து, நெடுஞ்சாலை, சாலை போக்குவரத்து துறை இணை மந்திரி வி.கே.சிங்கிடம், பச்சை தேயிலையை ராணுவம் கொள்முதல் செய்ய வேண்டும். கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலை பந்திப்பூரில் மேம்பாலம் கட்ட வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளிலும் விவசாயிகள் தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் பச்சை தேயிலை பறிக்க செல்லவில்லை. இதுகுறித்து பேசியுள்ள விவசாயிகள், “பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை விலை கிடைத்து வருகிறது. விலை குறைவால் உரம், தொழிலாளர்களுக்கு கூலி, பராமரிப்பு செலவை ஈடுகட்ட முடியவில்லை. மேலும் தேயிலை வாரியம் நிர்ணயம் செய்ய தொகையை சில தொழிற்சாலைகள் வழங்குவது இல்லை. இதனால் நஷ்டமடைந்து வருகிறோம். எனவே, குறைந்தபட்ச ஆதார விலையாக தேயிலை கிலோவுக்கு ரூ.30 வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளனர்.

**-ராஜ்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share