மத்திய நிதி அமைச்சகம் மாநிலங்களுக்கான அக்டோபர் மாத வரி பகிர்வாக ரூ.1,78,173 கோடியை நேற்று(அக்டோபர் 10) விடுவித்தது.
இதில் அக்டோபர் மாதத்திற்கான வரி பகிர்வான ரூ.89,086.50 கோடி மட்டுமல்லாமல் வரவிருக்கும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அடுத்த மாதத்திற்கான வரி பகிர்வான ரூ. 89,086.50 கோடியை முன்பணமாக மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது.
ஒவ்வொரு நிதி ஆண்டிலும், மத்திய அரசு அது வசூலிக்கும் மொத்த வரி வருவாயிலிருந்து ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை மாதம் ஒருமுறை மாநிலங்களுக்குப் பிரித்துக்கொடுக்கும்.
எவ்வளவு பிரித்துக்கொடுக்க வேண்டும் என்பதை அரசியல் அமைப்பு பிரிவு 280படி ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு அமைக்கப்படும் நிதி ஆணையம்தான் மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்யும்.
அதன்படி 15-வது நிதி ஆணையத்தின் பரிந்துரைப் படி மத்திய அரசுக்கு வரும் மொத்த வரி வருவாயிலிருந்து 41 % மாநிலங்களுக்கு பிரித்துக்கொடுக்ப் படுகிறது.
இந்த நிலையில்தான், நேற்று மத்திய அரசு அக்டோபர் மாத வரி பகிர்வான ரூ.89,086.50 கோடியும், அடுத்த மாத வரி பகிர்வான ரூ.89,086.50 கோடியும் முன் பணமாக மாநிலங்களுக்கு வழங்கியது. தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வரவிருப்பதால், அதனை முன்னிட்டுதான் இந்த முன்பணம் வழங்கப்பட்டுள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவித்தது.
இதில் கவனத்திற்குரிய விஷயம் என்னவென்றால், உத்தரப் பிரதேசத்திற்கு ரூ.31,962 கோடி வழங்கப் பட்டுள்ளது. ஆனால் தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானாவுக்கு ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு மொத்தமாக ரூ.28,152 கோடி தான் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு ரூ.7,268 கோடிதான் வழங்கப்பட்டுள்ளது. சதவீத ரீதியாகப் பார்த்தால் தமிழ்நாட்டிற்கு வெறும் 4.07 % வரி தான் வந்திருக்கிறது. ஆனால் உத்திரப் பிரதேசத்திற்கு 17.93 % வரி வருவாய் வழங்கப்பட்டுள்ளது.
இதைக் கண்டித்து விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இன்று(அக்டோபர் 11) தனது எக்ஸ் தளப் பக்கத்தில் “அரசியல் சுயநலத்துக்காக நிதி கூட்டாட்சியைச் சிதைக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டிக்கிறேன்” என ரவிக்குமார் தெரிவித்திருந்தார்.
தரவுகளின் படி, கடந்த சில ஆண்டுகளில் மத்திய அரசாங்கத்துக்குப் போய் சேரும் மொத்த வரி வருவாயில் தென் மாநிலங்களின் பங்கு தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது.
ஆனால் வரி பகிர்வோ அதற்கேற்றவாறு அதிகரிக்கவில்லை. மாறாகத் தென் மாநிலங்களுக்கு 2018-19 நிதி ஆண்டில் 17.98% ஆக இருந்த வரி பகிர்வு 2022-23 நிதி ஆண்டில் 15.75% சதவீதமாகக் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிக் பாஸ் சீசன் 8 : ஓரம் கட்டப்படுகிறாரா சவுந்தர்யா?
நிதி கூட்டாட்சியை சிதைக்கும் பாஜக அரசு : நிதி பகிர்வுக்கு ரவிகுமார் எம்.பி கண்டனம்!