டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வைத்து மது விற்பனை செய்யக் கூடாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.
மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மண்டல முதுநிலை மேலாளர்கள்,
மாவட்ட மேலாளர்கள் மற்றும் பறக்கும் படைத் துணை ஆட்சியர்களின் ஆய்வுக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் (மே 26) நடைபெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில், “அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் நண்பகல் 12.00 மணிக்குத் திறக்கப்பட்டு, இரவு 10.00 மணிக்கு மூடப்பட வேண்டும். இதில் எந்தவித விதிமீறல்களும் இருக்கக்கூடாது.
அனைத்து மதுபான சில்லறை விற்பனைக் கடைகளிலும், அனைத்து பதிவேடுகளையும் தினசரி அடிப்படையில் பராமரிக்கப்பட வேண்டும்.
மாவட்ட மேலாளர்கள் அனைவரும் சிரத்தையுடன் செயல்பட வேண்டும்.
மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களின் கூடுதல் விற்பனை விலைப் பட்டியல் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெளிவாகத் தெரியும்படி மதுபான கடையின் முன்புறத்தில் வைக்கப்பட வேண்டும்.
இதனை அனைத்து மாவட்ட மேலாளர்களும் உறுதி செய்ய வேண்டும்.
முதுநிலை மண்டல மேலாளர்கள், மண்டல அளவிலான பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் மாவட்ட மேலாளர்கள் தத்தம் மாவட்டங்களில் சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் ஏதும் செயல்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.
அவ்வாறு சட்டவிரோதமாக மதுக்கூடங்கள் ஏதேனும் செயல்படும்பட்சத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குத் தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் விற்கப்படுவதைக் கண்டறியவும் மதுபான கடைகளைத் தவிர மற்ற இடங்களில் மதுபானங்கள் விற்கப்படும் இடங்களைக் கண்டறிந்து, காவல்துறைக்குத் தெரிவித்து, காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மாவட்ட மேலாளர்கள் தினம்தோறும் எந்தவொரு மாவட்டத்திலும் மதுபான வகைகளை நிர்ணயிக்கப்பட்ட விலையைவிடக் கூடுதல் விலை வைத்து விற்பனை செய்யக்கூடாது.
ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால், அதற்குரிய அபராதம் வசூலிக்கப்பட வேண்டும், அப்பணியாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்கப்படுவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடைகள் திறந்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் செந்தில் பாலாஜி ஆய்வு கூட்டம் நடத்தி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பிரியா
