டாஸ்மாக் ரெய்டு வழக்கு : நீதிமன்றத்தில் நடந்த பரபரப்பு வாதம்!

Published On:

| By Kavi

TASMAC raid case

டாஸ்மாக் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் அமலாக்கத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. TASMAC raid case

கடந்த மார்ச் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை டாஸ்மாக் தலைமை அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. 

அமலாக்கத் துறை சொன்னது என்ன? TASMAC raid case

இந்த சோதனையின் முடிவில் அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது. 

டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகள் லஞ்சம் வழங்கியுள்ளன. கொள்முதலை குறைத்துக் காட்டியுள்ளனர். பணியிட மாற்றம் மற்றும் பார் லைசன்ஸ் உள்ளிட்டவைகள் வழங்க லஞ்சம் பெறப்பட்டுள்ளது. 

டாஸ்மாக் உயர் அதிகாரிகள் மற்றும் மதுபான நிறுவனங்கள் இடையே நேரடி தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

போக்குவரத்து நிறுவனங்களுக்கு டாஸ்மாக் 100 கோடி ரூபாய் செலுத்தியுள்ளது. இந்த முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் ஊழல் நடந்துள்ளது” என்று அமலாக்கத்துறை கூறியிருந்தது. 

அமலாக்கத் துறையின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, இதை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்று கூறியிருந்தார். 

மூன்று ரிட் மனுக்கள் TASMAC raid case

இந்த நிலையில் தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என். செந்தில்குமார் முன் ஆஜரான மாநில அரசு பிளீடர் (SGP), எட்வின் பிரபாகர், இந்த மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

இதை கேட்ட நீதிபதிகள் மனுக்கள் விசாரணைக்கு எண்ணிடப்பட்டால் நாளையே விசாரிக்கிறோம் என்று தெரிவித்தனர். 

இதில் முதல்  ரிட் மனுவை, தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிறுவனம் இணைந்து தாக்கல் செய்தன. அதில், “மாநில அரசின் அனுமதியின்றி அமலாக்கத் துறையால் இதுபோன்று சோதனைகள் நடத்தப்படுவது கூட்டாட்சி கொள்கையை மீறிய செயல் என்று அறிவிக்க வேண்டும்.

பண மோசடி தடுப்புச் சட்டம் 2002ன் கீழ் அதன் அதிகாரங்களை பயன்படுத்தி சோதனை நடத்திய அமலாக்கத் துறையின்  ECIR எனப்படும் வழக்கு தகவல் பதிவேட்டின் அசல் நகலை வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது. 

தொடர்ந்து டாஸ்மாக் நிறுவனம் தனியாக தாக்கல் செய்த மற்ற இரண்டு மனுக்களில், “கடந்த மார்ச் 6 முதல் 8 வரை நடத்தப்பட்ட சோதனை, ஆவணங்கள் பறிமுதல் உள்ளிட்ட அமலாக்கத் துறையின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று அறிவிக்க வேண்டும். 

விசாரணை என்ற போர்வையில் அமலாக்கத் துறை டாஸ்மாக் ஊழியர்களை துன்புறுத்தக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தன. 

ஆதாரமே கிடையாது TASMAC raid case

உள்துறைச் செயலாளர் தீரஜ் குமார் தாக்கல் செய்திருந்த பிரமாணப் பத்திரத்தில், “டாஸ்மாக் என்பது அரசுக்கு சொந்தமான நிறுவனம். தமிழ்நாடு முழுவதும் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை ஆகிய இரண்டுக்கும் பிரத்தியேக உரிமையை அரசு கொண்டுள்ளது.

டாஸ்மாக் 43 டிப்போக்களையும், 4,829 சில்லறை மதுபான கடைகளையும் இயக்குகிறது. மார்ச் 6, 2025 அன்று காலை 11.54 மணி முதல் மார்ச் 8, 2025 இரவு 11 மணி வரை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையின் போது அலுவலகத்தில் இருந்த டாஸ்மாக் அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை இணை இயக்குனரால் வழங்கப்படும் சோதனைக்கான  நகல் வழங்கப்படவில்லை. வெறுமனே கண்ணில் காட்டிவிட்டு அதன் உள்ளடக்கத்தை படித்து புரிந்து கொண்டதாக ஒப்புக்கொள்ளுங்கள் என்று கட்டாயப்படுத்தப்பட்டனர். 

மேலும் சோதனையின் போது டாஸ்மாக் நிறுவன இயக்குனர் விசாகன் ஐஏஎஸ், பொது மேலாளர் (நிர்வாகம் மற்றும் மொத்த விற்பனை) சங்கீதா, துணை பொது மேலாளர் (கொள்முதல் மற்றும் விற்பனை) ஜோதி சங்கர் ஆகியோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் வாய்மொழியாக வாக்குமூலம் பெற்றிருக்கின்றனர். 

அதோடு டெண்டர் செயல்முறை, மதுபான விலை நிர்ணயம் மற்றும் பார் உரிமைகள் தொடர்பாக சுமார் 100 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு இந்த மூன்று பேரும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வாக்குமூலங்கள் எல்லாம் சட்டத்தின் பார்வையில் செல்லுபடி ஆகாது. ஏனெனில் சட்டவிரோதமாக தடுப்பு காவலில் வைத்து அச்சுறுத்தி வற்புறுத்தி பதிவு செய்துள்ளனர். 

கடந்த நான்கு ஆண்டுகளில் போடப்பட்ட டாஸ்மாக் பார் டெண்டர்கள், போக்குவரத்து டெண்டர்கள் ஆகியவற்றின் ஆவணங்களை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருந்து வலுக்கட்டாயமாக எடுத்துச் சென்றுள்ளனர். 

அமலாக்கத்துறை அதிகாரிகள் டாஸ்மாக் ஊழியர்களை கிட்டத்தட்ட 60 மணி நேரம் சட்டவிரோத தடுப்பு காவலில் வைத்திருந்தனர். இதனால் ஊழியர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் சிரமப்பட்டனர். இது அரசியலமைப்பு மற்றும் மனித உரிமைகளை கடுமையாக மீறுவதாகும்.

மேலும், மார்ச் 6 முதல் 8 வரையிலான தேதிகளில் நடந்த சோதனை மற்றும் பறிமுதல்  செய்யப்பட்டது தொடர்பாக, உண்மைக்கு புறம்பான இரண்டு பறிமுதல் குறிப்பை, அதாவது சீசர் மெமோவை (panchanamas) அமலாக்கத்துறை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

விசாகன் பயன்படுத்திய மூன்று மொபைல் போன்கள் மற்றும் மூன்று ஜிமெயில் கணக்குகள், சங்கீதா பயன்படுத்திய ஒரு மொபைல் போன், ஜிமெயில் கணக்கு மற்றும் ஆரக்கிள் சர்வர் டேட்டா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த மெமோ குறிப்பில் பதிவு செய்திருந்தனர்.

இதுதவிர, ஜோதி சங்கருக்குச் சொந்தமான மொபைல் போன் மற்றும் ஜிமெயில் ஐடிகள் மற்றும் டாஸ்மாக் தலைமையகத்தில் உள்ள நான்கு டெஸ்க்டாப்களில் இருந்தும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தரவுகளைப் பெற்றனர்.

டாஸ்மாக் நிறுவனம் பிஎம்எல்ஏ-வின் கீழ் குற்றங்களில் ஈடுபட்டதற்கான எந்தவொரு நியாயமான அடிப்படை ஆதாரமும் இல்லை.  

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, உண்மைகளை தவறாக சித்தரிப்பதன் மூலம், பொதுமக்களின் பார்வையில் டாஸ்மாக் மற்றும் மாநில அரசின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க முயல்கிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவு! TASMAC raid case

இந்த வழக்கு இன்று (மார்ச் 20) நீதிபதிகள் ரமேஷ் மற்றும் செந்தில்குமார் முன் விசாரணைக்கு வந்தது. 

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், “ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் மணல் குவாரி விவகாரத்தில் அமலாக்கத்துறை இதுபோல் சோதனை நடத்தியது. மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டதால் அதன்படி விசாரணைக்கு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது” என்று கூறினார். 

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், “மனுவில் அமலாக்க துறையின் நடவடிக்கை தொடர்பாக கோரிக்கை வைக்காமல் பொத்தாம் பொதுவாக கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டனர். 

இதைத் திருத்தம் செய்து புதிய மனுவை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். 

இதைத்தொடர்ந்து டாஸ்மாக் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விக்ரம் சவுத்ரி, “சோதனை நடந்தபோது அதற்குரிய காரணங்களை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். குற்றம் மூலம் பணம் ஈட்டப்பட்டு சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டதற்கு சந்தேகப்படுவதற்கான காரணங்கள் இருக்க வேண்டும்

எந்த தகவலும் தெரிவிக்காமல் அலுவலகத்துக்குள் நுழைந்து அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். 60 மணி நேரம் பெண் அதிகாரிகளை சட்டவிரோதமாக சிறை பிடித்தனர். இது தனி நபர் சுதந்திரத்திற்கு விரோதமானது’ என்று வாதம் முன் வைத்தார். 

தொடர்ந்து அரசு தலைமை வழக்கறிஞர், “பெண் அதிகாரிகள் காலை 11 மணி முதல் நள்ளிரவு வரை சிறை பிடித்தனர். நள்ளிரவு வீட்டுக்கு அனுப்பிவிட்டு மீண்டும் காலை 8 மணிக்கு திரும்ப வேண்டும் என்று கூறினர்” என்று தெரிவித்தார். 

இதையடுத்து நீதிபதிகள், “டாஸ்மாக் அலுவலகம் சென்றதற்கான காரணங்களை அமலாக்கத்துறை தெரிவிக்க வேண்டும். இரவில் ஏன் சோதனை நடத்தப்பட்டது” என்று கேள்வி எழுப்பினர். 

அப்போது ஆஜரான மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எல் சுந்தரேசன், “இரவில் சோதனை நடத்தப்படவில்லை. டாஸ்மாக் ஊழியர்கள் அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டனர்” என்று கூறி அரசின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். 

இதைக் கேட்ட நீதிபதிகள், “பொய் சொல்ல வேண்டாம். அனைத்தும் செய்தித்தாள்களில் வெளியாகியுள்ளது.  அமலாக்கத் துறையின் இந்த சோதனை நடவடிக்கை என்பது அச்சுறுத்தலாகும்.

அமலாக்கத்துறை தனது அதிகாரத்தை பயன்படுத்திய விதத்தை தான் நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.  அமலாக்கத் துறைக்கு சோதனை நடத்த அதிகாரம் இருக்கலாம். ஆனால், அந்த அதிகாரம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டது என்பதுதான் பிரச்சனை” என்று கூறி பெண் அதிகாரிகளை இரவு வரை காவலில் வைத்திருந்ததற்கு அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த சோதனை தொடர்பாக மார்ச் 25ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கு விசாரணையை தள்ளி வைத்தனர். 

அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டு, எந்த வழக்குகளின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என்பது குறித்த விபரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.

குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, டாஸ்மாக் அலுவலகங்களின் சிசிடிவி காட்சிகளை தாக்கல் செய்யுமாறு அட்வகேட் ஜெனரல் பி எஸ் ராமனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின் போது, “இதுபோன்ற சோதனைகள் நள்ளிரவில் நடத்தக் கூடாது. பகல் நேரத்தில் தான் நடத்தப்பட வேண்டும்” என்ற மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் சுட்டிக்காட்டப்பட்டது. TASMAC raid case

 

You May Like

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share