அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் இன்று (மார்ச் 19) மனுக்கள் தாக்கல் செய்துள்ளது. TASMAC files petition in Madras High Court
கடந்த மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மற்றும் மதுபான ஆலைகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இதையடுத்து அமலாக்கத் துறை வெளியிட்ட அறிக்கையில், ” இந்த சோதனையில் பல்வேறு குற்ற ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மதுபான கொள்முதல் மூலம் தனியார் மதுபான நிறுவனங்கள் முறை கேட்டில் ஈடுபட்டுள்ளன. சோதனையில் கணக்கில் வராத ரூ. 1000 கோடிக்கு மேல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பார் உரிமை டெண்டர்களை ஒதுக்கியதில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. டாஸ்மாக் அதிகாரிகளின் உறவினர்களுக்கு டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது” என்று அமலாக்கத் துறை குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.
இந்த நிலையில் அமலாக்கத் துறையின் நடவடிக்கைக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதில் “மாநில அரசின் அனுமதி இன்றி டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக சட்டவிரோதமான பண பரிமாற்ற தடைச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்.
விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளையோ அல்லது ஊழியர்களையோ துன்புறுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்.
கடந்த 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெற்ற அமலாக்கத் துறையின் சோதனையையும், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையும் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. TASMAC files petition in Madras High Court