விற்பனை இலக்கை தவறவிட்டதற்காக நாயைப் போன்று சங்கிலியால் கட்டி ஊழியர்களை அவமானப்படுத்திய அதிர்ச்சியூட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. target miss… employees treat as dog at kerala
கேரள மாநிலம் கொச்சியில் பெரும்பாவூரில் உள்ள ஒரு தனியார் விற்பனை நிறுவனம் உள்ளது. வீடு வீடாக வீட்டுப் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் இந்நிறுவனத்தின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிக விற்பனை மேற்கொள்வதற்காக ஒவ்வொரு ஊழியருக்கும் விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்படுவதும், இலக்கை எட்டாதவர்களுக்கு தண்டனை கொடுப்பதும் அந்நிறுவனத்தின் வழக்கம்.
அதன்படி சமீபத்தில் விற்பனை இலக்கைத் தவறவிட்டதற்காக, அங்கு வேலை செய்யும் ஊழியர் ஒருவரின் கழுத்தை சங்கிலியால் கட்டி இழுத்து, முழங்காலில் ஊர்ந்து செல்ல வைத்திருப்பது வீடியோ மூலம் தெரியவந்திருக்கிறது. அவர்களுக்கு நாய் போன்று குரைக்க வேண்டும், தட்டில் உள்ள நாணயங்களை நக்க வேண்டும் என்பன போன்ற மனிதாபிமானமற்ற முறையில் கொடூர தண்டனைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த கொச்சி காவல்துறையினர், அரக்கப்பாடியில் உள்ள விற்பனை நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக கேரள தொழிலாளர் அமைச்சர் வி. சிவன்குட்டி கூறுகையில், “கேரளாவில் தொழிலாளர் சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்படுகின்றன. பணியிடத்தில் ஊழியர்களுக்கு எந்தவிதமான துன்புறுத்தலும் பொறுத்துக்கொள்ளப்படாது. விசாரணைக்கு பிறகு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கிடையே உயர் நீதிமன்ற வழக்கறிஞர் குளத்தூர் ஜெய்சிங் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில், மாநில மனித உரிமைகள் ஆணையமும் இந்த விஷயத்தை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.