2024 வரை போராட வேண்டும்: தமிமுன் அன்சாரி

Published On:

| By Balaji

2024ஆம் ஆண்டு வரை போராட வேண்டியதிருக்கும் என தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

சிஏஏவுக்கு எதிராக சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த போராட்டத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி இரவு போலீஸார் தடியடி நடத்தியது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே நடந்துகொண்டிருக்கும் சிஏஏ போராட்டங்களோடு, தமிழக போலீசாரைக் கண்டித்து பல இடங்களிலும் நள்ளிரவே போராட்டம் வெடித்தது. வண்ணாரப்பேட்டையில் தொடர்ந்து போராட்டம் நீடித்துவருகிறது.

ADVERTISEMENT

விஷமிகளின் தூண்டுதல் காரணமாக வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடைபெறுவதாக சட்டமன்றத்தில் நேற்று (பிப்ரவரி 17) முதல்வர் தெரிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை சட்டமன்ற உறுப்பினர் தமிமுன் அன்சாரி அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

வண்ணாரப்பேட்டை போராட்டக் களத்தில் பேசிய தமிமுன் அன்சாரி, “உங்கள் மீதான வன்முறைகளை கண்டித்து, சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசினேன். முதல்வர் அதிகாரிகள் எழுதி கொடுத்ததை பேசி, தவறான தகவலை அவைக்கு கொடுத்தார்.

ADVERTISEMENT

இங்கு போக்குவரத்துக்கு தொந்தரவு இல்லாமல் மக்கள் போராடுகிறார்கள். குழந்தைகளோடு பெண்கள் களமாடுகிறார்கள். இது வலிமை மிக்க மக்கள் எழுச்சியாகும். உங்களை அத்துமீறி காவல்துறை தாக்கியதும், இரவு 10 மணி, 11 மணி என்று கூட பாராமல் தமிழகமெங்கும் 300க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டங்கள் பரவியது. அந்த அளவிற்கு இப்போராட்டம் பலமிக்கதாக மாறிவிட்டது. சாமானிய மக்கள், தொழிலாளர்கள், ஏழைகள் போராடுகிறீர்கள். உங்கள் உணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் மதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

நாம் 2024 மே மாதம் வரை கூட போராட வேண்டி வரும். வடிவங்கள் மாறலாம். போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்ட தமிமுன் அன்சாரி, “யாரும் நிதானம் இழக்கக் கூடாது. உணர்ச்சி வசப்படக் கூடாது. யாராவது சீண்டினால், சகித்துக் கொண்டு போராட பழக வேண்டும். சிலர் நம்மிடமிருந்து வன்முறையை எதிர்பார்க்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பொறுமையை கையாள வேண்டும்.

ADVERTISEMENT

இங்கு போராட்ட குழுவுக்கு ஒரு அன்பான வேண்டுகோளை முன் வைக்கிறேன். இங்கு உணர்ச்சி வசப்பட்டு, யாரையும் புண்படுத்தும் வகையில் பேச அனுமதிக்காதீர்கள். தனி நபர் விமர்சனங்கள் வேண்டாம். கோரிக்கையை மட்டுமே முன்னிறுத்தி பேச சொல்லுங்கள்.தவறான முகம் சுழிக்கும் முழக்கங்களை எழுப்ப அனுமதிக்காதீர்கள். முழக்கங்களை வாங்கி படித்து சரி பார்த்து விட்டு பிறகு அனுமதியுங்கள். அமைதி வழியில் தொடர்ந்து போராடுவோம். இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் நம்மோடு இணைகின்றனர். மதத்தால் பிரிக்க நினைத்தவர்கள் தோற்றுவிட்டனர்” என்றும் தெரிவித்தார்.

மேலும், “தமிழக முதல்வருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறோம். பிப்ரவரி 19 அன்று 1 லட்சம் பேருடன் சட்டமன்றத்தை முற்றுகையிட உள்ளோம். இன்னும் 48-மணி நேரம் அவகாசம் உள்ளது. நீங்கள் சட்டமன்றத்தில் குடியுரிமை கறுப்பு சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினால் நாங்கள் போராட்டத்தை ரத்து செய்கிறோம். நாங்கள் மிரட்டவில்லை. வேண்டுகோளை தான் முன் வைக்கிறோம்” என்றும் வலியுறுத்தினார்.

**த.எழிலரசன்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share