ADVERTISEMENT

396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது!

Published On:

| By Selvam

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5-ஆம் தேதி இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படும். இந்தநாளில் மாணவர்கள் மற்றும் பள்ளியின் நலனுக்காக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் விருது வழங்கி கவுரவிப்பார்கள்.

அந்தவகையில் மத்திய அரசு சார்பில் இந்த ஆண்டு 50 ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார், தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை எஸ்.எஸ்.மாலதி ஆகியோர் ஆசிரியர் தினத்தன்று விருது வாங்க உள்ளனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில் தமிழக அரசு சார்பில் 396 ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5-ஆம் தேதி நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்தில் அரசு, தனியார், ஆங்கிலோ இந்தியன் என 50 ஆயிரம் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களில் மாணவர்கள் மற்றும் பள்ளியின் நலனுக்காவும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும் செயல்படும் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவிப்பார்கள். அந்தவகையில் இந்த ஆண்டு 396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

இவர்களில் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலை, மேனிலைப்பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளி ஆசிரியர்கள் 386 பேருக்கும் மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பணியாற்றும் 10 ஆசிரியர்கள் என 396 பேருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது. இந்த விருது வழங்கும் நிகழ்வானது செப்டம்பர் 5-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

38 மாவட்டங்களிலும் ஒரு மாவட்டத்திற்கு 3 முதல் 5 ஆசிரியர்கள் வீதம் 396 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

செல்வம்

’அலங்கு’ ஃபர்ஸ்ட் லுக்: சொல்ல வருவது என்ன?

ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவது ஏன்? – விராட் விளக்கம்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share