தமிழ்நாட்டில் தமிழில் ஃபெயில் ஏன்? மதிமுக கேள்வி!

By admin

|

Published on 28 Jun 2022, 12:00 AM

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் இன்று 28.06.2022 செவ்வாய்கிழமை காலை 10.00 மணிக்கு அக்கட்சித் தலைமையகமான சென்னை எழும்பூரில் இருக்கும் தாயகத்தில் கூடியது.

கூட்டம் தொடங்கியதுமே முதலில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

அண்ணா பிறந்தநாள், குடியரசுத் தலைவர் தேர்தல். மேகதாது அணை, அக்னிபாதை திட்டம், கூடங்குளம் அணு உலைக் கழிவுகள் என பல்வேறு விவகாரங்களில் தீர்மானம் நிறைவேற்றிய இந்தக் கூட்டத்தில்..
“தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஜூன்-20 ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் 10 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் 90.7 விழுக்காடு பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் 10 ஆம் வகுப்பு தமிழ்ப் பாடத்தில் 47 ஆயிரம் மாணவர்களும், கணிதப் பாடத்தில் 83 ஆயிரம் மாணவர்களும் தேர்ச்சி பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. 10 ஆம் வகுப்பு தமிழ் மொழிப் பாடத்தை எழுதிய 5.16 விழுக்காடு மாணவர்கள் தேர்ச்சிபெறவில்லை.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை இதனை முறையாக ஆராய்ந்து உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும். மொழிப் பாடத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர் பணி இடங்கள் காலியாக இருப்பின் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்காக நடத்தப்படும் 1466 பள்ளிகளில், ஒரு இலட்சத்து 25 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அப்பள்ளிகள் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்காமல், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ், நலத்துறை தாசில்தார் மேலாண்மையில் இயங்கி வருகின்றன.

இப்பள்ளிகளில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர் தேர்ச்சி விகிதம் மற்ற அரசுப் பள்ளிகளைவிட பல விழுக்காடு புள்ளிகள் குறைவாக உள்ளன. இதற்குக் காரணம், பல பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மேலும் மலைப்பகுதிகளில் செயல்படும் பழங்குடியினர் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை சரிவர இல்லை என்று தெரிகிறது.

இதுபோன்ற தனிப் பள்ளிகள் சிறப்பு கவனம், தனி நிதி ஒதுக்கீடு மற்றும் இடஒதுக்கீடுகளை உறுதி செய்யும் குறிக்கோளுடன் தொடங்கப்பட்டிருந்தாலும், அவை சமூக, பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்டு, பின்தங்கிய குழந்தைகளுக்கு பயன்தராத நிலை இருப்பது வேதனைக்குரியது. எனவே தமிழக அரசு சிறப்புப் பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகளைச் சீரமைக்க வேண்டும்” என்ற தீர்மானம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

-**வேந்தன்**

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

admin

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel