தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுக்குத் தமிழக அரசு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
மத்திய கல்வித் துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி சென்னைக்கு வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், “புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழக அரசு தனது கருத்தைத் தான் பதிவு செய்துள்ளதே தவிர எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இதுவரை தமிழக அரசு புதிய கல்வி கொள்கையை எழுத்துப்பூர்வமாக எதிர்க்கவில்லை” என தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் இன்று (செப்டம்பர் 6) செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது பேசிய அவர்,
“பள்ளிக்கல்வித் துறை மற்றும் உயர்கல்வித் துறை சார்பில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்ப்பது தொடர்பாகக் கடிதம் வழங்கியுள்ளோம்.
இதன்மூலம் எழுத்துப்பூர்வமான எதிர்ப்பை தமிழ்நாடு அரசு பதிவு செய்துள்ளது. அந்த கடிதத்தில் எதற்காகத் தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது என்பதற்கான காரணத்தைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம்.
எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழக அரசு உருவாக்கியுள்ள மாநில கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும். மாநில கல்விக் கொள்கை வெளியான பிறகு அதன் அடிப்படையில் தமிழகத்தில் கல்வி முறை அமையும்” என்று அமைச்சர் கூறியுள்ளார்.
மோனிஷா
