தமிழகத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டு ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது.
இந்தநிலையில் கோடை வெயிலின் தாக்கத்தால் பள்ளிகள் திறப்பு ஜூன் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நாளை மறுநாள் தமிழகத்தில் பள்ளிகள் திறக்க இருந்த நிலையில் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை.
நேற்று மட்டும் சென்னை, மதுரை, கடலூர், திருச்சி, நாமக்கல் என 16 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்துள்ளது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.44 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனால் முதல்வர் ஸ்டாலினுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று (ஜூன் 5) பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதனை தொடர்ந்து பள்ளிகள் திறப்பு தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 12-ஆம் தேதியும், 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 14-ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வம்