இன்று (ஜனவரி 26) குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. rajbhavan call to DMK MLAs
ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இந்த தேநீர் விருந்தை புறக்கணித்திருக்கும் நிலையில், தங்கம் தென்னரசு, ரகுபதி, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகிய அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தத் தேநீர் விருந்துக்காக ஆளுநர் மாளிகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 3400 பேர் அழைக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில் ஆளுங்கட்சியான திமுக எம்.எல்.ஏ.க்களிடையே நேற்று முதல் பரபரப்பாக ஒரு விவாதம் நடந்துகொண்டிருக்கிறது. அதாவது, ‘ஆளுநர் மாளிகையில் இருந்து உங்களுக்கு போன் வந்துச்சா?’ என்பதுதான் திமுக எம்.எல்.ஏ.க்களிடையே பரிமாறப்பட்ட கேள்வி.
நேற்று முதல் திமுக எம்.எல்.ஏ.க்களில் கணிசமானோருக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்திருக்கிறது.
’வணக்கம் சார்… நாங்க ராஜ் பவன்ல இருந்து பேசுறோம். நாளை கவர்னர் ஏற்பாடு செய்திருக்கிற ரிபப்ளிக் டே பார்ட்டியில நீங்க கண்டிப்பா கலந்துக்கணும். அதுக்காக இன்வைட் பண்ணத்தான் பர்சனலா உங்களுக்கு போன் பண்றோம்.
நீங்க வர்றதை கன்ஃபார்ம் பண்ணீங்கன்னா நாங்க அரேஞ்ச்மென்ட் பண்றதுக்கு வசதியா இருக்கும்’ என்று அந்த பெண் அலுவலர் பேச திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு திகைப்பும் குழப்பமும் ஒரு சேர ஏற்பட்டுள்ளது.
’தலைமையை கேட்டு சொல்றோம்’ என்று அந்த அழைப்புக்கு பதில் அளித்துவிட்டு சக எம்எல்ஏக்களிடம் இது பற்றி விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
அப்போதுதான் தெரிந்தது தேர்ந்தெடுக்கப்பட்ட சில எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமே ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது என்பது.
சென்னையில் ஒரு திமுக எம்.எல்.ஏ.விடம் இதுகுறித்து பேசினோம். “எனக்கு வழக்கமாக வர்ற அழைப்பு போஸ்டுல வந்தது. ஆனா போன் எதுவும் வரலை சார்” என்றார்.
வட மாவட்ட, மத்திய மாவட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் சிலரிடம் இதுபற்றி கேட்டபோது, “எங்களுக்கு நேத்து லேண்ட் லைன் அழைப்பு வந்ததது. ஒரு கணம் குழம்பிட்ட்டோம். .கட்சியிலேர்ந்து தான் போன் போட்டு செக் பண்றாங்களோனு கூட நெனைச்சோம். ஆனா அப்புறம் ஆளுநர் மாளிகை நம்பர்தானு கன்ஃபார்ம் பண்ணோம். தலைமையே கலந்துகொள்ளாத போது எதற்கு எங்களுக்கு போன் பண்றாங்கனு தெரியலை” என்றார்கள்.
இன்னொரு வட மாவட்ட எம்.எல்.ஏ.வோ, “சுதந்திர தின விருந்துக்கு இதேபோல எனக்கு ஆளுநர் மாளிகையில இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்துச்சு. ஆனா இப்ப வரலை” என்கிறார்.
திமுக எம்.எல்.ஏ.க்களிடையே குழப்பத்தையும் விவாதத்தையும் உண்டுபண்ணியிருக்கிறது ஆளுநர் மாளிகையின் தொலைபேசி அழைப்பு.
–வணங்காமுடி வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு!
போக்குவரத்து மாற்றம் : ECR ரோட்டில் போக முடியாது!
rajbhavan call to DMK MLAs
