நீல செந்தூரம்!

Published On:

| By admin

ஸ்ரீராம் சர்மா
பழமொழிக் குட்டிகள் எட்டடிக்கு பதினாறு அடிதான் பாயும்.
நமது முதலமைச்சர் மாண்புமிகு முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்களோ, பலகாத தூரம் பாய்ந்து வரலாற்று சாதனை படைத்து விட்டார்!
காவேரி மருத்துவமனையில் கரைந்து போன அந்த அரசியல் கருவூலம் இன்றிருந்தால், முதல்வரை அள்ளி அணைத்து உச்சி முகர்ந்து கொண்டாடி இருக்கும்!
ஆம், தமிழகத்துத் தலைநகரின் நெற்றி முகட்டிலொரு நீல செந்தூரம்!
தாழ்த்தப்பட்டவர் (?) என்னும் அடைக்குறிக்குள் காலம் காலமாக உழன்று வரும் ஓர் இனத்தை – அந்த அடைக்குறியைத் தகர்த்தெறிந்து, உயர்த்திப் பிடித்து…
ஏறத்தாழ பத்து மில்லியன் ஜனத்தொகை கொண்ட சென்னை மாநகரத்தின் தலைமைப் பதவியில் அமர்த்தியிருக்கும் நமது முதல்வரின் செய்கை, புதுமை – அருமை. இதுவல்லோ திராவிட மாடலின் மேன்மை!
மனம் கசிந்து எழுதுகிறேன்…
வணக்கத்துக்குரிய பிரியா ராஜன் அவர்கள் சென்னை மேயராகப் பதவியேற்ற அந்த தருணம்…
பதினெட்டாம் நூற்றாண்டின் முதல் மனித வெடிகுண்டாக – தாய்த் தமிழகத்தின் விடுதலைக்காக – அந்நியரின் ஆயுத கிடங்குக்குள் எகிறிக் குதித்த ‘குயிலி’ என்னும் அந்த வரலாற்றுத் தாயின் பேரான்மா குளிர்ந்து போயிருக்கும். முதல்வரின் சிவந்த கன்னங்களில் அரூபமாக வந்து முத்தமிட்டிருக்கும்.
புராண, வரலாற்றுக் காலம் தொட்டு பெண்மையின் பெருமை கொண்டாடப்பட்டு வந்தாலும், அவர்களை அவையத்து முன் நிறுத்த தயங்கியே இதுகாறும் உலகம் சுழன்று வந்துள்ளது என்பது கசப்பான உண்மை.
சைவ சித்தாந்தத்தின் அறுபத்து மூன்று நாயன்மாரில், காரைக்கால் அம்மையார் – பாண்டிய நாட்டு மங்கையர்கரசியார் – திருவாரூர் இசைஞானியார் ஆகிய மூவர் மட்டுமே கயிலாயம் கண்டனர். பன்னிரண்டு ஆழ்வார்களின் வரிசையை ஆண்டாள் மட்டுமே அலங்கரிக்கிறார்!
இயேசுபிரான் கல்லறையிலிருந்து உயிர்த்தெழுந்தபோது காட்சி கொடுத்தது தாய் மரியாள், எலிசபெத், மரி மகதலேனா ஆகிய மூன்று பெண்களுக்குத்தான் எனினும், அவரது பன்னிரண்டு சீடர்களில் ஒரு பெண் சீடர் கூட இல்லை.
இறைத்தூதர் அண்ணல் நபிகளாரைப் பற்றி எழுதப்பட்ட கோடிக்கணக்கான பக்கங்களில் அவரது ஞானத் துணைவியார் கதீஜா அம்மையாரைப் பற்றி எழுதப்பட்ட பக்கங்கள் இரண்டு சதவிகிதமாவது இருக்குமா என்பதற்கு உத்தரவாதமில்லை.
கம்பராமாயண காவியத்தில் சூர்ப்பனகை கதாபாத்திரத்தின் முடிவு என்னவானது என்பதற்கு இதுகாறும் விடையில்லை. கண்ணகியின் சிலம்பு இன்னமும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது. பாஞ்சாலியின் அவிழ்ந்த கூந்தல் துரியோதன மரணத்துக்குப் பின்னும் அலைபாய்ந்து கொண்டுதான் இருக்கிறது.
மேற்கத்திய மண்ணில் – ஐரோப்பிய நாடுகளில் பெண் விடுதலை குறித்த சிந்தனை 15ஆம் நூற்றாண்டில் கிளர்ந்து எழுந்தது எனலாம்.
அன்றந்த பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், ஃபிரான்ஸ் நாட்டின் ‘வெர்ஸாய்’ மாளிகையை நோக்கி 5,000 பெண்கள் வெகுண்டு படை நடத்தி சென்றதையும் கூட, வெறும் ரொட்டிக்கான போராட்டம் என மாச்சரியம் கொண்ட ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் குறித்து வைத்தார்கள். அது தவறு. சொல்லப்போனால் குற்றம்!
வேலு நாச்சியாரையே மறைக்கத் துணிந்தவர்கள் அப்படித்தான் செய்வார்கள். அதனை ஆதாரங்களோடு பட்டவர்த்தனமாக்கி வெளிவரப் போகும் எனது “ராணி வேலு நாச்சியார்” பன்மொழிப் புத்தகத்தில் நீள எழுதி வைத்திருக்கிறேன்.


சென்னை மேயரை வாழ்த்திப் பேசிய கனிமொழி எம்.பி அவர்கள்…
“சாதி, மதம் என்பது கற்பிதம். ஆண், பெண் என்பதும் கற்பிதம்” என்றார். அந்த உண்மையை வரலாற்றுப் பக்கங்களுக்கு விடப்பட்ட அறைகூவலாகவே கொள்ள முடிகிறது.
மேலும், “வணக்கத்துக்குரிய மேயர் அவர்களே… உங்களுக்கு அளிக்கப்பட்ட இந்த வாய்ப்பை நீங்களே அனுபவித்து, அதன் பலனை இந்த சமூகத்துக்கு அளிக்க வேண்டும். உங்கள் கணவரோ, அண்ணனோ, தம்பியோ உங்களை ஆட்டி வைப்பார்கள் என்னும் வழக்கமான பொதுப் பார்வையின் எள்ளலைக் கடந்து பணியாற்றுங்கள்…” என்றும் அறிவுறுத்தினார். அதில் அகண்ட நியாயம் உண்டு.
மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் இந்த முடிவை உலகார்ந்த பெண் சமூகம் கொண்டாடி மகிழும்!
ஆண் இனமும் – பெண் இனமும் ஒன்றிணைந்து அனுபவிக்கத்தான் இந்த உலகம். அதில், ஓர் இனம் மட்டும் முன் நின்று கொள்வது நியாயமல்ல. அதிலும், சாதி பார்த்துத் தள்ளிவைப்பது பெருங்கொடுமை என எண்ணித்தான் இந்த முடிவை எடுத்திருப்பார் நமது முதலமைச்சர்.
தமிழக வரலாற்றில் முதன்முறையாக – வெள்ளந்தியான மக்கள் வாழும் வடசென்னையை நோக்கித் தன் பாசமிகு பார்வையை வீசியிருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர்.
Nathanail Higginson என்பார் தனது 35 வயதில் கண்ட, 340 வருட பாரம்பரியம் கொண்ட சென்னை மாநகராட்சியில்…

ADVERTISEMENT


தான் அமர்ந்து அலங்கரித்த அந்த நாற்காலியில் – தன் மகளெனக் கருதி – 28 வயதே நிரம்பிய எம்.காம் பட்டதாரியை நம்பிக்கையோடு அமரவைத்து நலம் கண்டிருக்கிறார் முதல்வர்.
முதல்வரின் நம்பிக்கையைக் கட்டிக் காப்பாற்றி – தலைநகராம் சென்னையை அழகுற நிமிர்த்த வேண்டிய பொறுப்பு மேயருக்கு உண்டு.
விடுதலை இந்தியாவில் சிறு கிராமமாக இருந்த அன்றைய சென்னை, இன்று அகண்ட மாநகராக விரிந்து வீங்கி விட்டது. தலைநகரைப் பொலிவுறச் செய்ய வேண்டும் என்றால் நகரின் உள்கட்டமைப்பை உன்னிப்புடன் அணுகியாக வேண்டும்.
நகரெங்கும் அடைந்துவிட்ட முறைகேடான ஆக்கிரமிப்புகளையும், ஊழல்களையும் துணிந்து களைய வேண்டும். பொருளாதாரம் மேம்பட போக்குவரத்து சீர்படச் செய்ய வேண்டும்.
இரண்டு சாலைகள் சந்திக்கும் இடத்தை SPLAY CORNER என்பார்கள். நகரின் பல இடங்களில் அதற்கான வெளி இல்லாமல் போக வாகன விபத்துகள் அதிகமாகின்றன.
சென்னையின் நீர் மேலாண்மை மிக முக்கியம். போர்க்கால நடவடிக்கையில் அதனை சீர்படுத்த வேண்டும். எனக்குத் தோன்றியதை எழுதிவிட்டேன்.
நகர மேலாண்மை விவரம் தெரிந்தவர்கள் இன்னும் அதிகம் சொல்வார்கள். ஒரு கோடி பேர் அடைந்து வாழும் இந்த நகரத்தில் கோரிக்கைகளாகக் குவியும்.
அத்தனைக்கும் செவி சாய்த்து , அதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதன் மூலம், மக்களுக்கு நல்வாழ்வு அளித்தாக வேண்டும். மேயர் எனும் அரும் பதவி அளித்த முதல்வருக்குப் பெருமை சேர்த்தாக வேண்டும்.
இடது கண்ணின் அருகில் மச்சமோ , மருவோ இருந்தால் அந்தப் பெண் பொறுமையும் – புத்திக் கூர்மையும் – விடாப்பிடி குணமுள்ளவராகவும் இருப்பார் என்கிறது மேற்கத்திய அங்க லட்சணக் குறிப்புகள். அதுதான் பலிக்கட்டுமே!

சிவகங்கையை உயர்த்திய வேலுநாச்சியார் வாழ்ந்த மண்ணில் – செங்கை சிவத்தின் பெயர்த்தியால் சாதித்துவிட முடியாதா என்ன !?

ADVERTISEMENT

பெண்ணின் பெருந்தக்க யாவுள!? என்றார் திருவள்ளுவர்.
திருவள்ளுவரை வழிமொழிந்து – வரலாற்றுச் சாதனை படைத்து – சென்னைக்கொரு பெண் மேயரை அமர வைத்திருக்கிறார் நமது முதலமைச்சர்.
வணங்கி வரவேற்போம்!

**கட்டுரையாளர் குறிப்பு**

ADVERTISEMENT

**வே.ஸ்ரீராம் சர்மா** – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share