1 முதல் 8 வகுப்புகளுக்கு அரையாண்டுத் தேர்வு: தலைமை ஆசிரியர்களுக்குப் பறந்த ‘ரகசிய’ உத்தரவு!

Published On:

| By Santhosh Raj Saravanan

Tamilnadu Half yearly exam question papers guidelines

சென்னை:
“எக்ஸாம் வந்தாச்சு… கேள்வித்தாள் எங்கே?” என்று ஆசிரியர்கள் பதற்றமடையத் தேவையில்லை. தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, அரையாண்டுத் தேர்வுக்கான (Half-Yearly Exam) கேள்வித்தாள்களைப் பதிவிறக்கம் செய்வது தொடர்பான முக்கிய வழிகாட்டுதல்களைப் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

வரும் டிசம்பர் மாதம் தொடங்கவுள்ள அரையாண்டுத் தேர்வுகள் மற்றும் இரண்டாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வுகள் (Summative Assessment) மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக நடைபெறவுள்ளன. இதற்காகத் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (SCERT) பிரத்யேகமாக வினாத்தாளைத் தயாரித்துள்ளது.

ADVERTISEMENT

வினாத்தாள் எங்கே கிடைக்கும்?

வினாத்தாள்கள் வெளியில் கசிவதைத் தடுக்கும் வகையிலும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் இம்முறை ஆன்லைன் மூலமாகவே பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன்படி பள்ளித் தலைமை ஆசிரியர்கள் exam.tnschools.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். பள்ளிக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்யேக ‘யூசர் நேம்’ (User Name) மற்றும் ‘பாஸ்வேர்டு’ (Password) ஆகியவற்றைப் பயன்படுத்தி உள்ளே நுழைய வேண்டும். அதில், ஒவ்வொரு வகுப்புக்கும் மற்றும் பாடத்திற்கும் உரிய வினாத்தாள்கள் (PDF வடிவில்) கிடைக்கும்.

ADVERTISEMENT

கெடுபிடி உத்தரவு:

“வினாத்தாள்களை எப்போது வேண்டுமானாலும் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என்று நினைக்க வேண்டாம்” என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தேர்வு நடைபெறும் நாளுக்கு முந்தைய நாள் பிற்பகல் 2 மணிக்கு மேல்தான் அந்தந்தப் பாடத்திற்கான கேள்வித்தாளைப் பதிவிறக்கம் செய்ய முடியும். முன்கூட்டியே டவுன்லோட் செய்ய முடியாது என்பதுதான் இதில் உள்ள ‘செக்’.

ADVERTISEMENT

எண்ணும் எழுத்தும் திட்டம்:

1 முதல் 3ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும்’ (Ennum Ezhuthum) திட்டத்தின் கீழ் தேர்வுகள் நடைபெறுகின்றன. இவர்களுக்கான வினாத்தாள்களும் இதே இணையதளத்தில்தான் கிடைக்கும். ஆனால், 4, 5ஆம் வகுப்பு மாணவர்களுக்குக் காலையில் தேர்வும், 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதியமும் தேர்வுகள் நடைபெறும் வகையில் அட்டவணை திட்டமிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முக்கியம்:

பதிவிறக்கம் செய்யப்பட்ட வினாத்தாள்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். தேவைக்கேற்ப நகல் எடுத்து (Xerox) மாணவர்களுக்கு வழங்க வேண்டும். வினாத்தாள்கள் லீக் ஆனால், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரே பொறுப்பேற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை கறாராகத் தெரிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறையால், வினாத்தாள் கசிவு தடுக்கப்படுவதுடன், அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரே தரத்திலான வினாத்தாள் கிடைப்பது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு அட்டவணை மற்றும் கூடுதல் விவரங்களை எமிஸ் (EMIS) தளம் மூலமாகவும் தெரிந்துகொள்ளலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share