இமாச்சல், மணிப்பூர், கேரளா… தேசியத்துக்கு வழிகாட்டும் தாய்மை நிறைந்த தமிழ்நாடு

Published On:

| By Aara

இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பிலே இருக்கும் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு தேசிய உணர்வோடு செயல்பட வேண்டிய நிலையிலும்… குறிப்பிட்ட மாநில உணர்வோடே செயல்பட்டு வருகிறது.

அதேநேரம் மாநில உணர்வோடு செயல்பட வேண்டிய தமிழ்நாடு அரசோ, தனது மாநில உணர்வு தாண்டி தேசிய உணர்வோடும் செயல்பட்டு இந்தியாவுக்கே வழிகாட்டி வருகிறது.

இந்த வகையில்தான் இந்தியாவின் எந்த மாநிலம் துயருற்றாலும் உடனடியாக, கண்ணீர் துடைக்கும் கரமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலம், நமது கூட்டணிக் கட்சி ஆட்சி செய்யும் மாநிலம் என்ற ஏந்த வரம்பும் வைத்துக் கொள்ளாமல் உதவிக் கரம் நீட்டுகிறார்.

கேரளாவில் ஜூலை 30 ஆம் தேதி அதிகாலை வயநாடு பகுதியில் தொடர் கடும் மழையின் விபரீத விளைவாக நிலச்சரிவு ஏற்பட்டு கடும் சேதம் ஏற்பட்டிருக்கிறது. 200க்கும் மேற்பட்டோர் இந்த கொடூரத்தில் சிக்கி இறந்துவிட்டனர். இன்னும் பல உடல்கள் புதையுண்டு கிடக்கின்றன.

இந்த நிலையில்தான் தகவல் வெளியான சில மணி நேரங்களிலேயே ஜூலை 30 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்… கேரள முதலமைச்சர் பினராயி விஜயனைத் தொடர்புகொண்டு பேசினார். தமிழ்நாடு எல்லாவிதமான உதவிகளையும் கேரளாவுக்கு செய்யத் தயாராக இருப்பதாக கூறினார்.

அதன்படியே உடனடியாக கேரளாவுக்கு 5 கோடி ரூபாய் நிவாரண நிதியை அளிப்பதாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அதுமட்டுமல்ல, கேரளாவுக்கு தமிழ்நாடு சார்பில் மீட்புப் படையினரையும் அனுப்ப்பி வைத்தார் முதலமைச்சர். ஐ.ஏ.எஸ்,. அதிகாரிகளான டாக்டர் சரவணன், டாக் வர்கீஸ் ஆகியோர் தலைமையில் மீட்புப் பணிக் குழுக்களையும் கேரளாவுக்கு அனுப்பி வைத்தார். நிவாரணப் பொருட்களும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அறிவித்த நிவாரணத் தொகை குறித்த நேரத்தில் கேரளாவுக்கு பயன்பட வேண்டும் என்பதில் அக்கறை காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், ஜூலை 30 ஆம் தேதியே பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலுவைத் தொடர்புகொண்டார். அப்போது வேலு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்தார்.  கிட்டத்தட்ட  திருவண்ணாமலையை நெருங்கிவிட்ட நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு போன் செய்திருக்கிறார்.

‘நீங்க உடனே திருவனந்தபுரம் போயிட்டு, நம்ம அரசின் நிவாரணத் தொகையை கேரள முதல்வர்கிட்ட கொடுத்துட்டு வந்துடுங்க’ என்று சொன்னதும் இரவோடு இரவாக சென்னை திரும்பினார் அமைச்சர் எ.வ.வேலு.

அதன் பின்  ஜூலை 31 ஆம் தேதி  காலை சென்னையில் இருந்து திருவனந்தபுரம் புறப்பட்டார். அன்று பகலில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து, தமிழ்நாடு அரசின் சார்பிலான 5 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் எ.வ.வேலு. அதாவது முதல்வர் ஸ்டாலின் நிவாரணத் தொகையாக 5 கோடி ரூபாயை அறிவித்த 24 மணி நேரத்துக்குள் அத்தொகை கேரளாவின் கைகளில் சேர்க்கப்பட்டது.

மிகுந்த நன்றி சொல்லிவிட்டு, அமைச்சர் எ.வ.வேலுவிடம் சில நிமிடங்கள் உரையாடிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ‘உங்க முதலமைச்சர் ஸ்டாலின் நேத்துதான் சம்சாரிச்சார்… இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்களே..’ என்று கேட்டிருக்கிறார்.’

அப்போது, கேரள மக்கள் மீது முதல்வர் ஸ்டாலின் வைத்திருக்கும் அக்கறையை சுட்டிக் காட்டிய வேலு,  ‘என்னை உடனடியாக புறப்பட்டு உங்களை சந்திக்கச் சொன்னார்’ என்பதையும் எடுத்துச் சொன்னார்.

வயநாடு பகுதியின் நிலச்சரிவு குறித்தும் மீட்புப் பணிகள் குறித்தும் வேலுவிடம் விளக்கினார் பினராயி விஜயன்.  மேலும் தமிழ்நாடு அரசின் பேரிடர் குழு, மற்றும் நிவாரணப் பொருட்களுக்காகவும் நன்றி சொன்னார் பினராயி விஜயன்.

அப்போது அமைச்சர் எ.வ.வேலு,  ‘நாம அண்டை மாநிலங்கள்.  மேலும் என்ன வேணும்னாலும் சொல்லுங்க. தமிழ்நாடு எப்போதும் உதவத் தயாராக இருக்கிறது’ என்ற ஸ்டாலினின் செய்தியை கேரள முதல்வரிடம் தெரிவித்தார்.

கேரள முதல்வருடனான இந்த சந்திப்பின் நெகிழ்ச்சி நிமிடங்களை முதல்வர் ஸ்டாலினுக்கும் தொலைபேசி செய்து பகிர்ந்துகொண்டார் அமைச்சர் எ.வ.வேலு.

அண்டை மாநிலமான கேரளாவாகட்டும், வட இந்திய மாநிலமான இமாச்சல் ஆகட்டும்… எந்த மாநிலமாக இருந்தாலும் இதுபோன்ற பாதிப்புகளில் தாமாக முன் வந்து உதவும் தாய்மை மிக்க மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு.

ஏற்கனவே 2023 ஆகஸ்டு மாதம் இமாசல பிரதேச மாநிலம் கடும் மழைப் பொழிவு, வெள்ளம் ஆகியவற்றைத் தொடர்ந்து நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

அப்போது இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங்- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தொலைபேசியில் உரையாடினர். இதன் தொடர்ச்சியாக இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் நிவாரண பணிகளுக்காக 10 கோடி ரூபாய் வழங்கி, அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங்குக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

அதுமட்டுமல்ல, “பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்திற்கு உதவுவதற்காக தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும் எப்போதும் தயாராக இருப்பதாகவும், ஏதேனும் உதவி தேவைப்பட்டால் என்னை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்” என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

இயற்கை சீற்றங்களின் போது மட்டுமல்ல, மனிதர்களால் உண்டாக்கப்படும் செயற்கை சீற்றங்களின்போதும் தமிழ்நாடு அரசு பிற மாநிலங்களுக்கு துணையாக நின்றிருக்கிறது.

2023 ஆகஸ்டு மாதம் மணிப்பூரில் இரு பிரினருக்கு இடையே ஏற்பட்ட வன்முறையால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். பிரதமர் மோடி இன்றுவரை மணிப்பூர் சென்றிடாத நிலையில். அப்போதே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மணிப்பூரை ஆட்சி செய்த பாஜக முதல்வர் பைரேன் சிங்கிற்கு கடிதம் எழுதினார்.

அதாவது, மணிப்பூரில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு ரூ.10 கோடி மதிப்பிலான அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க ஒப்புதல் வழங்கக் கோரி, மணிப்பூர் பாஜக அரசின் முதலமைச்சர் பைரேன் சிங்கிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

50,000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில அத்தியாவசிய பொருட்களின் தேவை அதிகரித்து வருவதாகவும் தனது கவனத்திற்கு வந்ததாகத் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், இந்த இக்கட்டான நேரத்தில், சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான தார்பாலின் விரிப்புகள், படுக்கை விரிப்புகள், கொசுவலைகள், அத்தியாவசிய மருந்துகள், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் பால் பவுடர் போன்ற தேவையான நிவாரணப் பொருட்களை வழங்குவதன் மூலம் மணிப்பூர் மாநிலத்திற்கு உதவிகளை வழங்கிடத் தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது என்றும் தனது கடிதத்தில் தெரிவித்தார்.

அதுமட்டுமல்ல கலவரத்தால் மணிப்பூரில் விளையாட்டு பயிற்சி பெற முடியாத விளையாட்டு வீரர்களை தமிழ்நாட்டில் அழைத்து பயிற்சி அளித்திட ஏற்பாடுகள் செய்தார் முதல்வர் ஸ்டாலின்.

இப்படி எந்தக் கட்சி ஆட்சி செய்கிறது என்றெல்லாம் பார்க்காமல், எங்கெல்லாம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அங்கே எந்தவித அரசியல் ஆதாயமும் கருதாமல் தமிழ்நாடு அரசு உதவிக் கரம் நீட்டி வருகிறது.

அந்த வகையில்தான் இப்போது கேரளாவுக்கும் உதவிக் கரம் நீட்டியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

இந்தியாவின் பிற மாநிலங்களில் தமிழ்நாடு மீதான மரியாதையையும், மாண்பையும் இப்படிப்பட்ட நடவடிக்கைகள் அதிகப்படுத்தியிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்!

-வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஃபேக் சர்டிபிகேட்: பூஜா கெட்கர் ஐஏஎஸ் தேர்ச்சி ரத்து… யுபிஎஸ்சி அதிரடி!

வயநாடு நிலச்சரிவு: தமிழக காங்கிரஸ் ரூ.1 கோடி நிவாரண நிதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share