பொன் மகளான ஆட்டோ ஓட்டுநர் மகள்.. கேரம் சாம்பியன் காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசு!

Published On:

| By Selvam

உலககோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த காசிமாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.1 கோடிக்கான பரிசுத்தொகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 18) வழங்கினார்.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் 6-ஆவது உலககோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்த போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த காசிமா தனிநபர், இரட்டையர் பிரிவு, குழு பிரிவு என மூன்று பிரிவுகளில் தங்கம் வென்று அசத்தியிருந்தார். இவர் சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மேஹ்பூப் பாஷாவின் மகள் ஆவார். இந்த போட்டியில் பங்கேற்ற மித்ரா, நாகஜோதி ஆகிய இருவரும் தங்கம், வெள்ளி வென்றனர்.

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு தமிழக அரசு ரூ.5 கோடி பரிசு அறிவித்தது. குகேஷுக்கு கிடைத்த வரவேற்பும் புகழும் காசிமாவுக்கு கிடைக்கவில்லை, அவருக்கு தமிழக அரசு பரிசு வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

ADVERTISEMENT

இந்த நிலையில், காசிமாவுக்கு ரூ.1 கோடி பரிசுத்தொகையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (டிசம்பர் 18) வழங்கினார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “விளையாட்டுப் போட்டிகளில் நம் தமிழ்நாட்டு வீரர் – வீராங்கனையர் பல்வேறு சாதனைகளை படைத்திட திமுக அரசு தொடர்ந்து துணை நின்று வருகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில், அமெரிக்காவில் நடைபெற்ற 6-ஆவது உலக கேரம் போட்டியில் பங்கேற்ற காசிமா உட்பட 3 வீராங்கனையர் மற்றும் 1 பயிற்சியாளருக்கு தலா ரூ.1.50 லட்சம் என மொத்தம் ரூ. 6 லட்சம் நிதியுதவியை தமிழ்நாடு சாம்பியன் அறக்கட்டளை வழங்கி வாழ்த்தி அனுப்பி இருந்தோம்.

வண்ணாரப்பேட்டையில் இருந்து புறப்பட்டுச் சென்ற காசிமா 3 வெவ்வேறு பிரிவுகளில் தலா ஒரு தங்கம் என 3 பதக்கங்களை குவித்து திரும்பினார்.

அவரைப்போலவே, மித்ரா 2 தங்கம், நாகஜோதி 1 தங்கம், 1 வெள்ளி வென்று சாதனை படைத்தனர்.

வெற்றி பெற்று நாடு திரும்பிய போதே அவர்களை நேரில் சந்தித்து நினைவுப்பரிசு வழங்கினோம்.

அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் அவர்களின் கேரம் திறமையை போற்றும் வகையில் பரிசுத்தொகையை வழங்குவோம் என்று அறிவித்தோம். எனவே, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின்படி,

காசிமாவுக்கு ரூ.1 கோடி, மித்ரா, நாகஜோதி ஆகியோக்கு தலா ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.2 கோடியை சிறப்பு ஊக்கத் தொகையாக இன்று நேரில் வழங்கி மகிழ்ந்தோம்.

தங்கைகள் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்க அனைத்து வகையிலும் திமுக அரசு துணை நிற்கும். அவர்களுக்கு என் அன்பும், வாழ்த்தும்” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பாஷா மரணம்: தேர்தல் முடிவுகளை மாற்றிய கோவை குண்டுவெடிப்பு!

அதிமுக – பாஜக கூட்டணி? டிடிவி தினகரனுக்கு ஜெயக்குமார் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share