கொரோனா வைரஸ் தொற்று உச்சக்கட்டத்தில் பரவியபோது அவசரமாக 7ஆயிரம் மருத்துவ ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள். அவர்களால்தான் அன்று அரசு மருத்துவ துறை பெருமளவில் தொற்று கால பணிகளை சமாளிக்க முடிந்தது.
இந்த நிலையில் இன்று (டிசம்பர் 31) முதல் அவர்களை பணிக்கு வரவேண்டாம் என்று நேற்று (டிசம்பர் 30) இரவு அறிவிப்பு செய்துள்ளது தமிழக அரசு.
கொரோனா வைரஸ் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் பரவி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
அந்த மே 2020 காலகட்டத்தில் லேப் டெக்னிஷியன், மருத்துவர்கள், செவிலியர்கள் என சுமார் ஏழாயிரம் பேரை, பணி நியமனம் செய்தது தமிழக அரசு.
கொரானா இரண்டாவது அலை வரை எதிர்த்துப் போராடியதில் இவர்களுக்கும் பெரும் பங்குண்டு.
இந்த நிலையில் அவர்களின் வேலை பறிப்பு 7 ஆயிரம் பேரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. இதை பற்றி கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்டு இப்போது பணி நீக்கப்பட்ட செவிலியர் கனகராஜிடம் மின்னம்பலம் சார்பாக பேசினோம்.

“நான் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக வேலை செய்துவந்தேன்.
கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்த போது, உயிர் போனாலும் பரவாயில்லை என்று முன் வந்து பணியில் சேர்ந்தோம்.
அப்போது எங்களை தொடர்ந்து கொரோனா வார்டில்தான் போடுவார்கள். அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டும் பணியில் இருந்து வருகிறோம்.
திமுக ஆட்சிக்கு வந்ததும் டாக்டர்கள், லேப் டெக்னிசியன் போன்றவர்களை படிப்படியாக நிறுத்தினார்கள்.
அன்று நியமிக்கப்பட்ட 3500 செவிலியர்களில் 1200 பேரை ஏழு மாதங்களுக்கு முன்பு நிறுத்தினார்கள். மிச்சமிருந்த 2300 செவிலியர்களை டிசம்பர் 31 முதல் வரவேண்டாம் என்று ஆர்டர் போட்டு விட்டார்கள். நேற்றுடன் சரியாக 30 மாதங்கள் பணி செய்துள்ளோம்.
இந்த நிலையில் கான்ட்ராக்ட் காலம் முடிந்துவிட்டது, நாளை முதல் பணிக்கு வரவேண்டாம் என்று ஜி ஒ அனுப்பினார்கள். நேற்று டிசம்பர் 30 ஆம் தேதி இரவு செகண்ட் ஷிப்ட் முடியும்போது இந்த ஆர்டர் வந்ததும் ஹார்ட் ஒரு நிமிடம் நின்றுவிட்டது.

முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கொரோனா தொற்று காலத்தில் பணிக்கு அமர்த்தப்பட்டவர்களை பணி நிரந்தரம் செய்வோம்’ என்று வாக்குறுதி அளித்தார்.
அவர்தான் இன்று எங்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பணி நிரந்தரம் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் 30 மாதமாக 14 ஆயிரம் ரூபாய் குறைவான ஊதியத்திற்கு வேலை செய்துவந்தோம்.
இனி எங்கள் வாழ்க்கை என்னாகுமோ” என்றபடியே நம்மைப் பார்த்தார்.
ஆயிரக்கணக்கான செலிவியர்களின் குடும்பத்தினர் சார்பாக பேசிய செவிலியர் கனகராஜின் பார்வையை நம்மால் எதிர்கொள்ள முடியவில்லை.
வணங்காமுடி
