முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் என்ற புதிய திட்டத்தை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப்ரவரி 19) அறிவித்தார். இத்திட்டத்துக்கு ரூ.25,922கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பில்,
“ஒன்றிய அரசின் நிதி ஆயோக் சமீபத்திய தனது அறிக்கையில் பன்முக வறுமைக் குறியீட்டின்படி, தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் சதவீதம் மிகக் குறைவாக 2.2 சதவீதம் மட்டுமே என அறிவித்துள்ளது.
இருப்பினும், தற்போது மிகவும் வறியநிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கடைக்கோடி ஏழைக் குடும்பங்களையும் கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றிட அரசு முடிவு செய்துள்ளது.
அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளில் மிகவும் வறியநிலையில் உள்ள சுமார் ஐந்து இலட்சம் ஏழைக் குடும்பத்தினருக்கு அரசின் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வழங்கி, விரைவில் அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்திட அரசு உறுதியாக உள்ளது.
ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர் ஒற்றைப் பெற்றோர் குடும்பங்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள், மனநலம் குன்றியவர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறப்புக் குறைபாடு உடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் போன்ற சமூகத்தின் விளிம்புநிலையில் வாழ்ந்திடும் மக்கள் அனைவரும் இத்திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மட்டுமன்றி கல்வி, வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.
அரசிடம் உள்ள தரவுகள், கள ஆய்வு, மக்கள் பங்கேற்புடன் கலந்துரையாடல், கிராமசபை ஆகியவற்றின் மூலம் மாநிலம் முழுக்க மிகவும் ஏழைக் குடும்பங்கள் கண்டறியப்படும்.
‘முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்’ என்ற பெயரிலான இப்புதிய திட்டத்தில், மக்கள் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்கேற்பும் உறுதி செய்யப்படும். இந்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 27,922 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தமிழக பட்ஜெட்: திமுக கூட்டணிக் கட்சிகள் பாராட்டு!
பிரமாண்ட பட்ஜெட், பாலிவுட் ஹீரோயின் அறிமுகம்… நெக்ஸ்ட் லெவலுக்கு சென்ற ‘கர்ணா’