கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணிகள் வழங்க தமிழ்நாடு அரசின் எல்காட் நிறுவனம் சர்வதேச டெண்டர் கோரியுள்ளது.
தொழில்நுட்ப திறனில் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கும் வகையில் 2025 – 26 நிதிநிலை அறிக்கையில், அடுத்த இரண்டு ஆண்டுகளில் கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. tamilnadu government bid on e tender

இத்திட்டத்தை செயல்படுத்த அரசு உயர் அலுவலர்கள், அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி மெட்ராஸ், மத்திய அரசின் தேசிய தகவலியல் நிறுவனம் (NIC), தமிழ்நாடு மின் ஆளுமை முகமை (TNeGA), தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (ELCOT) உள்ளிட்டவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம் பெற்றுள்ள தொழில்நுட்ப தரநிலைக் குழு அமைக்கப்பட்டது.
தொழில்நுட்ப தரநிலைக் குழுவினர் இதுவரை 7 கூட்டங்கள் நடத்தி இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ள மடிக்கணினியின் செயல்திறன், நினைவகத்தின் அளவு (STORAGE), மென்பொருள் (SOFTWARE), மின்கலத்தின் (பேட்டரி) திறன், வன்பொருட்கள் (HARDWARE) உள்ளிட்ட தொழில்நுட்பச் சாதனங்களுக்கான விவரக்குறிப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
மேலும், மென்பொருள் தொடர்பாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில் புகழ்பெற்ற மென்பொருள் நிறுவனங்களுடன் ஆலோசனை செய்யப்பட்டது.

இந்தநிலையில், கடந்த மே 19-ஆம் தேதி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி குறித்த உயர் நிலைக்குழுவின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்தநிலையில், கல்லூரி மாணவர்களுக்கு 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்க சர்வதேச டெண்டர் கோரப்பட்டுள்ளது. இந்த மடிக்கணினிகள் 8 ஜிபி RAM, 256 GB SSD Hard disk, 14 அல்லது 15.6 இன்ச் திரை, விண்டோஸ் 11 ஆகிய செயல் திறன் கொண்ட வகையில் இருக்கும் என்று தெரிகிறது. tamilnadu government bid on e tender
