கலைஞரின் எழுத்தாற்றலைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு, கடலில் 134 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனா போன்ற நினைவுச் சின்னத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், அரசியல் மட்டுமல்லாது, எழுத்திலும் சிறந்த ஆளுமையாகத் திகழந்தார். அவருடைய எத்தனையோ இலக்கியங்கள் இன்றும் பெயர் சொல்லும் அளவுக்கு விளங்கிவருகின்றன. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 24ம் தேதி, சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ், ‘மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு மெரினாவில் நினைவிடம் அமைக்கப்படும்’ என அறிவித்தார்.
அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் 39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும். அந்த நினைவிடத்தில் கலைஞரின் வாழ்க்கை, சிந்தனை அடங்கிய நவீன ஒளிப்படங்கள் இடம்பெறும்” என்றார். அத்துடன், கலைஞருக்கு அமைக்கப்படவிருந்த நினைவிடத்தின் மாதிரி வரைபடமும் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் ரூ.39 கோடி செலவில் அரசு சார்பில் கலைஞருக்கு, நினைவிடம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக 2.23 ஏக்கர் பரப்பளவில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

பேனா நினைவுச் சின்னம்
இந்த நிலையில் மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் இருந்து 650 மீட்டர் தொலைவில் கடலுக்குள் 134 அடி உயரத்தில் பிரம்மாண்ட பேனா போன்ற நினைவுச் சின்னத்தை நிறுவ தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது. இதற்கு, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ள நிலையில், மத்திய அரசின் அனுமதிக்கு இது அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடலுக்குள் ரூ.81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படவுள்ளது.
இந்த நினைவுச் சின்னத்தைப் பொதுமக்கள் காணும்வகையில் கலைஞரின் நினைவிடத்தில் இருந்து அதாவது அவருடைய நினைவிடத்தின் பின்பக்க கேட்டிலிருந்து, இந்த பாலம் நிலத்தின் மீது 290 மீட்டரும், கடலின் மீது 360 மீட்டர் (மொத்தம் 650 மீட்டர்) அமையும் வகையில் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட கட்டுமானத்துக்கு ‘முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ என்று பெயரிடப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கலைஞர் சிலை
2018ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி வயது முதிர்வு காரணமாக காலமான கலைஞருக்கு பெருமை சேர்க்கும் வகையில், திமுக தலைமையிலான மு.க.ஸ்டாலின் அரசு, அவருக்குப் பல்வேறு இடங்களில் சிலைகளை நிறுவிவருகிறது. இதையடுத்து, இந்த ஆண்டு மே மாதம் 28ம் தேதி, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில், பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் 12 அடி உயர பீடத்தில், 16 அடி உயரத்தில் ரூ.1.7 கோடி மதிப்பில் கலைஞருக்கு முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. தவிர, கலைஞரின் பிறந்த நாளை அரசே கொண்டாடும் என்று அறிவிக்கப்பட்டு, பல இடங்களில் அவருடைய பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
”தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கிப் போட்டாலும் கட்டுமரமாக மிதப்பேன், அதில் ஏறி நீங்கள் கரைசேரலாம்” என்று தன் கரகர குரலில் கலைஞர் பேசிய வசனம் மிக பிரபலம். இப்போது கலைஞர் பேனா வடிவில் கடலில் நிலை நிறுத்தப்பட இருக்கிறார்.
இந்த சின்னம் மிகச் சிறந்த சுற்றுலா மையமாகவும் விளங்கும் என்கிறார்கள் நோக்கர்கள்.
ஜெ.பிரகாஷ்