இதுதான் நல்லாட்சியா? ஸ்டாலின் எழுப்பும் கேள்விகள்!  

Published On:

| By Balaji

நல்லாட்சி வழங்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது குறித்து ஸ்டாலின், தினகரன் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மத்திய பணியாளர் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி நல்லாட்சிக்கான குறியீட்டுக் கூட்டுத் தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, விவசாயம், தொழில்  ஆகிய துறைகளின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.  

ADVERTISEMENT

இதுகுறித்து பெருமிதம் தெரிவித்துள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், “மத்திய அரசின் விருதுகளால் மாண்புமிகு அம்மா அவர்களின் அரசு அனைத்து துறையிலும் இந்தியாவிலேயே முதல் நிலை வகித்து கொண்டிருப்பது” நாட்டு மக்களுக்கு தெளிவாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.பொது நிர்வாகத்தில் முதலிடம் வகிப்பது தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று கொண்டிருப்பதை உறுதி செய்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் அரசு நிர்வாகம் சீர்க்கெட்டுவிட்டதாகவும், ஊழல் மலிந்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வரும் சூழலில், நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடத்தை பிடித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

ADVERTISEMENT

இதனை விமர்சித்து இன்று (டிசம்பர் 27) அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “குடிப்பதற்கு எல்லோருக்கும் பாதுகாக்கப்பட்ட தண்ணீர் இல்லை, பொதுமக்கள் நடப்பதற்கு நல்ல சாலை வசதிகள் இல்லை, பெண்களுக்குத் தேவையான பாதுகாப்பு இல்லை என பொதுமக்கள் வேதனைகள் அனுபவித்துவரும் இந்த நேரத்தில், மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதில் தமிழகம் முதல் இடம் என்று மத்திய பாஜக அரசு தரவரிசைப் பட்டியல் வெளியிட்டிருப்பது, கும்பி எரியுது, குடல் கருகுது, குளு குளு ஊட்டி ஒரு கேடா என்பதைத்தான் நினைவுபடுத்துகிறது” என்று தெரிவித்தார்.

முதலில் மத்திய அரசின் இந்தத் தரவரிசைப் பட்டியல் ஏன் திடீரென்று வெளியிடப்பட்டுள்ளது? இந்தத் தர வரிசைப் பட்டியலுக்கு மத்திய அரசில் யார் ஒப்புதல் கொடுத்தது? என கேள்விகளை எழுப்பியுள்ள ஸ்டாலின், “மூன்றாண்டு கால எடப்பாடி பழனிசாமியின் கேடுகெட்ட, மக்கள் விரோத, ஊழல் அரசுக்கு நல்லாட்சி சாயம் பூசி கூட்டணி தர்மத்தை நிலை நாட்டியிருக்கிறதோ மத்திய பாஜக அரசு என்ற சந்தேகம் தமிழக மக்களுக்கு, குறிப்பாக நடுநிலையாளர்களுக்கு எழுகிறது” என்று விமர்சித்துள்ளார்.

ADVERTISEMENT

ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 9 துறைகளில் இரு துறைகளில் மட்டுமே முதலிடத்தில் இருப்பதாக உள்ள தர வரிசைப் பட்டியலில் எப்படி தமிழகம் முதலிடத்திற்கு வந்துள்ளதாக ஆய்வு கூறுகிறது? என்று சந்தேகம் தெரிவிக்கும் ஸ்டாலின், நீதி நிர்வாகம் மற்றும் பொதுப் பாதுகாப்பில் முதலிடம் என்று மத்திய அரசு கண்டுபிடித்திருக்கிறது. பொள்ளாச்சியில் 250 பெண்களுக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை, ஸ்டெர்லைட் போராட்டத்தில் கொத்துக் கொத்தாக சுட்டு வீழ்த்தப்பட்ட கொடுமை, பெண்களின் பாதுகாப்பு மட்டுமல்ல, பெண் குழந்தைகள் பாலின வன்கொடுமையில் தமிழகம் இந்தியாவில் 2-ஆவது இடம் என்று அடுக்கடுக்கான சட்டம்- ஒழுங்கு சீரழிவில் அவதிப்படும் மக்களுக்கு அதிமுக நல்லாட்சி வழங்கியுள்ளது என்று எப்படி மத்திய அரசு கண்டுபிடித்தது? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “தமிழகம்தான் உள்ளாட்சித் தேர்தலே மூன்று வருடங்கள் நடத்தாத ஒரே மாநிலம் என்று மத்திய அமைச்சரே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.அதனால் மாநிலத்திற்கு வர வேண்டிய உள்ளாட்சி நிதியை மத்திய அரசே நிறுத்தி வைத்துள்ளது. சாலை, குடிநீர், கழிப்பிட வசதிகளை அளிப்பதில் முக்கியப் பங்காற்றும் உள்ளாட்சி அமைப்புகளே இல்லாத போது எப்படி இந்த துறையில் தமிழகம் முதலிடத்திற்கு வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டது?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாரபட்சமற்ற ஆய்வு ஒன்று, அரசியல் சாராத நடுநிலை அமைப்பினால், நிபுணர்களைக் கொண்டு, இன்றைக்கு நடத்தப்பட்டால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தமிழகம் கமிஷன், கரெப்ஷன், கலெக்ஷனில் முதலிடம் பிடிக்கும். சட்டம் ஒழுங்கு சீரழிவில் முதல் இடத்தைப் பிடிக்கும் என்றும், ஊராட்சி முதல் தலைமைச் செயலகம் வரை, அமைச்சர்கள் தொடங்கி முதல்வர் வரை பலரும் லஞ்ச ஊழல் தடுப்புத் துறையின் ஊழல் வழக்கு விசாரணைகளிலும், சிபிஐ விசாரணையிலும் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ள ஸ்டாலின்,  “மோசமான அதிமுக ஆட்சியைத் தூக்கி நிறுத்த, மத்தியில் உள்ள பாஜக அரசு முனைந்திருக்கிறது என்றால், பாஜக அரசுக்கும் இங்குள்ள அதிமுக அரசுக்கும் மத்திய-மாநில அரசுகளுக்கிடையேயான உறவு என்பதையும் தாண்டி, ஏன், கூட்டணி உறவுக்கும் அப்பாற்பட்ட நெருக்கமான ஒரு உறவாக, அதிமுக- பாஜக உறவு அமைந்திருக்கிறது” என்று சந்தேகித்துள்ளார்.

மேலும், “தங்களுக்குப் பயன்படாத தமிழகம் எப்படியோ சீரழியட்டும், அந்த மக்கள் எக்கோடோ கெட்டுப் போகட்டும் என்ற வஞ்சக நோக்கில், அதிமுக அரசுக்கு நல்லாட்சி சான்றிதழை மத்திய பாஜக அரசு செயற்கையாக அளித்திருக்கிறது. தரவரிசைப் பின்னணியைப் பற்றி, தமிழக மக்களுக்கு எழுந்துள்ள ஐயப்பாடுகளைப் போக்கிட வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு இருக்கிறது” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “நல்லாட்சி வழங்குவதில் தமிழகத்திற்கு முதலிடமாம். இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவையோடு நம்மிடம் இருந்து விடைபெறுகிறது 2019” என்று விமர்சித்துள்ளார். ,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share