சமூக வலைதளங்களில் அடிக்கடி வித்தியாசமாக நடக்கும் ஒரு சில நிகழ்வுகள் , திருமண அழைப்பிதழ்கள், போட்டோ ஷூட், கடிதங்கள் போன்றவை வைரலாகும், அந்தவகையில் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருவது மின் வாரிய ஊழியர் ஒருவரின் வித்தியாசமான விடுப்புக்கடிதம் தான்.
பொதுவாக ஒரு நிறுவனத்திலோ அல்லது வேறு ஏதாவது ஒரு துறையிலோ வேலை செய்பவர்கள் விடுப்பு எடுக்க ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி அதன்பின் விடுப்பு எடுப்பார்கள்.
அதிலும், சொல்லும் காரணம் தகுதியான காரணங்களாக இருந்தால் மட்டுமே அவர்களுக்கு நிறுவனம் விடுப்பு வழங்கும்.
அந்த வகையில், புதுக்கோட்டையில் மின்வாரியத்தில், உதவி மின் பொறியாளராகப் பணியாற்றி வருபவர் ரகுநாதன் இவர்,
தனக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்கக் கோரி, தனது உயரதிகாரிக்கு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார்.

ரகுநாதன் கொடுத்த அந்தக் கடிதத்தில்,
“வாரியத்தாலும், தொழிற்சங்க அமைப்புகளாலும் நடத்தப்படும் விதம் குறித்து, நான் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறேன்.
அதிலிருந்து, மீண்டு வந்து வாரியப் பணிகளை செவ்வனே தொடரும் வகையில் மன அமைதி வேண்டி, எனது வீட்டிலேயே அண்ணல் காந்தியடிகளின் உருவப்படத்துக்கு முன்பாக அமர்ந்து தியானம் செய்ய முடிவெடுத்திருக்கிறேன்.
ஆகவே, எனக்கு ஒரு நாள் விடுப்பு தாருங்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த வித்தியாசமான விடுப்பு கடிதத்தை பார்த்த அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி, வாரிய சட்டத்தில் இடமில்லை என்பதால் இது போன்ற காரணங்களுக்கெல்லாம் விடுப்பு தர முடியாது என்று சொல்லி விடுப்பு கடிதத்தை நிராகரித்திருக்கிறார்.
இந்த விடுப்பு கடிதம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்