வரலாற்றில் ஸ்டாலின்

Published On:

| By Minnambalam Desk

பாலசுப்ரமணியம் முத்துசாமி 

அமர்த்தியா சென்னும், ஜான் ட்ரெஸ்ஸும் எழுதி வெளியிட்ட, ‘நிச்சயமற்ற பெருமிதம்’, (An Uncertain Glory) என்னும் புத்தகம் 2013 ஆம் ஆண்டில் வெளியானது. அது இந்தியாவின் பொருளாதார மேம்பாடு தொடர்பான ஒரு புத்தகம்.

நான்காண்டுகளில், மு.க.ஸ்டாலின் தலைமையில், தமிழ்நாடு அடைந்துள்ள மேம்பாடுகளைப் பற்றியும் இதையே சொல்லலாம்.

அண்மையில், தமிழ்நாடு அரசு பத்திரிக்கையாளர்களை அழைத்து, நான்காண்டுகளில் தமிழ்நாடு அடைந்துள்ள மேம்பாடுகளை வெளியிட்டது. அதன் சிறப்பு என்னவென்றால், அந்த மேம்பாடுகள், பெரும் பொருளாதாரப் புள்ளி விவரங்கள் அடிப்படையில் முன் வைக்கப்பட்டன என்பதுதான்.

தமிழ்நாட்டு அரசியல் கடந்த 50 ஆண்டுகளில் திரை ஆளுமைகளால் கட்டமைக்கப்பட்டது. பேச்சு அல்லது திரை தொடர்பான அரசியலே நிகழ்ந்து வந்ததால், மாநிலத்தின் நிர்வாகம் தொடர்பான கூட்டங்கள், சமூகப் பொருளாதார முன்னேற்றம் தொடர்பான உரையாடல்கள் பெரிதாக நிகழ்ந்ததில்லை. Tamilnadu Development achieved by M.K Stalin

”தமிழ்நாடு 2020” என்றொரு தமிழ்நாட்டின் நீண்ட கால வளர்ச்சித் திட்டம் ஒன்றை ஜெயலலிதா பன்னாட்டு ஆலோசகர்களின் உதவியுடன் உருவாக்கினார். ஆனால், அதன் மீது ஒரு நாளும் ஊடக வெளிச்சமோ அல்லது அறிஞர்கள் உரையாடலோ நடைபெற்றதில்லை. கலைஞர் உருவாக்கிய மென்பொருள் கொள்கை பற்றி எந்த விவாதங்களும் நடைபெற்றதில்லை.

அதேசமயம் ஸ்டாலினுக்கு திரைத்துறையில் பெரும் ஈடுபாடும், திறனும் இல்லை. தந்தையைப் போல பெரும் பேச்சுத் திறனும் இல்லை. அதை அவரே பொதுவெளியில் ஒப்புக் கொண்டு, தான் அதைத் தன் உழைப்பால் ஈடுகட்டுவேன் எனச் சொல்லியிருந்தார். Tamilnadu Development achieved by M.K Stalin

கடந்த 4 ஆண்டுகளைப் பின்னோக்கிப் பார்க்கையில் அது பெருமளவு உண்மை என்பதை உணர முடிகிறது. கொரோனா காலத்தில், மிகத் தைரியமாக, மருத்துவமனைகளுக்கு நேரடியாகச் சென்று தொற்றுநோய்க்கு எதிராக உயிரைப் பணயம் வைத்து காரியத்தில் ஈடுபட்டிருந்த மருத்துவக் குழுவுக்கு ஊக்கமளித்தார். அந்தக் காலத்தில் இந்தியாவில் எந்த அரசியல் தலைவருமே இவர் போல தொடர்ந்து களத்தில் இருக்க வில்லை.

முதன்முறையாக முதல்வராகப் பதவியேற்ற ஸ்டாலின், தன் அமைச்சரவையில்,  பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் என்னும் முன்னாள் பன்னாட்டு நிதி அமைப்புகளில் பணியாற்றிய நிபுணரை நிதியமைச்சராக நியமித்தார். அவர் தமிழ்நாட்டு நிர்வாகத்தை மேம்படுத்த உலகின் மிகச்சிறந்த நிபுணர்கள் கொண்ட குழு ஒன்றை உருவாக்கினார். நல்ல, நேர்மையான நிர்வாகி என அறியப்பட்ட தங்கம் தென்னரசு தொழில்துறை அமைச்சராகப் பதவியேற்றார். Ta

அவர் பதவியேற்ற காலத்தில், கொரோனோ பெருந்தொற்றின் இரண்டாம் அலை வீறு கொண்டு எழுந்தது. மே மாதம் பதவியேற்ற புதிய அரசு, அக்டோபர் வரை பொருளாதார நடவடிக்கைகள் பெருந்தொற்று காரணமாக முடக்கப்பட்டிருந்தன. அந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்னை பெருமழையில் மூழ்கியது. இதையெல்லாம் தாண்டி, கொரோனா காலத்தில் 0.7% எனக் குறைந்திருந்த பொருளாதார வளர்ச்சி, 2021-22 ஆம் ஆண்டில், 7.89% என மீண்டது.  கொரோனா ஆண்டில், 62000 கோடியாக இருந்த வருவாய்ப் பற்றாக்குறை இரண்டே ஆண்டுகளில் 32000 கோடியாகக் குறைக்கப்பட்டது. 

2021 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து வரும் அதே சமயத்தில்,  நிதிப்பற்றாக்குறை மற்றும்  வருவாய்ப் பற்றாக்குறை சதவீதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகின்றன.

தொழில் மற்றும் சேவைத் துறை முன்னெடுப்புகள்!

தொழில்துறையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு, முதலீடுகள் ஈர்க்கப்பட்டன.  897 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 624 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த நான்காண்டுகளில், தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 46% உயர்ந்துள்ளது. இந்தியாவின் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41% தமிழ்நாட்டில் பணிபுரிகிறார்கள்.  நான்காண்டுகளில், ஏற்றுமதி இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. Tamilnadu Development achieved by M.K Stalin

தமிழ்நாடு, தோல் பொருட்கள், ஜவுளி, கார் உற்பத்தி போன்ற துறைகளின் ஏற்கனவே முதன்மை இடத்தில் இருந்து வருகிறது. அத்துடன் கடந்த 4 ஆண்டுகளில், மின்னணுத் துறையும் இதில் சேர்ந்துள்ளது முக்கியமான சாதனையாகும்.  2020-21 ஆம் ஆண்டில் 1.66 பில்லியன் டாலர்களாக இருந்த மின்னணு ஏற்றுமதி, இன்று 14.65 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது திறன்பேசி உற்பத்தியினால் உருவானது என்றாலும், இதன் அடுத்த பாய்ச்சலாக செமி கண்டெக்டர் உற்பத்தித் தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மின்னணுத் துறை ஏற்றுமதியில் 100 பில்லியன் டாலரைத் தொடுவதே இலக்கு என இன்றைய தொழில் துறை அமைச்சர் ராஜா தெரிவித்திருக்கிறார்.

இவை தவிர, உலகளாவிய திறன் மையங்கள் திட்டம் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டு இன்று அவற்றில் 94 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள்.  உலகளாவிய திறன் மையங்கள் என்பவை உலகின் மிக முக்கியமான நிறுவனங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடுகளைச் செய்யும் மையங்கள். இவை தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்யக் கூடியவை. Tamilnadu Development achieved by M.K Stalin

மென்பொருள் துறை வளர்ச்சியைப் பரவலாக்க, மென்பொருள் துறைக்கான கட்டமைப்புகள் சேலம், தஞ்சாவூர், விழுப்புரம் என சிறு நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்டமைப்புகள் முழுமையாக உபயோகிக்கப்பட்டு வருகின்றன என்பது மகிழ்ச்சியான விஷயம். Tamilnadu Development achieved by M.K Stalin

 தொழில்துறையில், ஆராய்ச்சி, நிதித் தொழில்நுட்பம், மின் வாகனங்கள் என 13 முக்கியமான வருங்கால வளர்ச்சித் துறைகளாக அடையாளப்படுத்தப் பட்டு, அத்துறைகளுக்கான மாநில அரசின் கொள்கைகள் வகுக்கப் பட்டு, புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.  தமிழ்நாட்டில் புதிதாக முதலீடு செய்ய வரும் முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டியாக விளங்குவதோடு, மாநிலத்தின் நம்பகத்தன்மையையும் அதிகரிக்கவும் உதவும். Tamilnadu Development achieved by M.K Stalin

வெற்றிகரமான தொழில்துறைக்கு, மின்சார உற்பத்தி மிக முக்கியமான தேவை. கடந்த காலத்தில் இத்துறை மிக மோசமாகக் கையாளப்பட்டதன் விளைவால், தேர்தலில் தோல்வியைச் சந்தித்த வரலாறு திமுகவுக்கு உண்டு. இம்முறை, பெரும் இயற்கைச் சீற்றங்கள் வந்த போதும், மின் உற்பத்தியும், பகிர்வும் தொடர்ந்து சீராகவே இருந்து வருகிறது. Tamilnadu Development achieved by M.K Stalin

நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு, பெருமளவில் சேவைத்துறையைச் சார்ந்திருக்கின்றன. தமிழ்நாட்டிலும் சேவைத் துறை முக்கியமானதாக இருந்தாலும், தொழில்துறையின் பங்களிப்பு இந்திய மாநிலங்களிலேயே மிக அதிக சதவீதத்துடன் இருக்கிறது. தமிழ்நாடு அரசின் தொழில்துறை முன்னெடுப்புகள், தொழில்துறையின் பங்களிப்பை மேலும் மேம்படுத்த உதவும். சீனத்துக்கு மாற்றாக, தொழில்துறையில் முதலீடு செய்ய வரும் பன்னாட்டு முதலீட்டாளர்களுக்கு, தமிழகம் ஒரு முக்கியமான மாற்றாக உருவாகி வருகிறது.

தொழில்துறையின் இன்னொரு முக்கியமான அங்கம் ஸ்டார்ட் அப் தமிழ்நாடு என்னும் புத்தாக்க நிறுவனம். புத்தாக்க முயற்சிகளுக்கு உதவிடும் அரசு நிறுவனங்களும், திட்டங்களும் மற்ற மாநிலங்களில் 10-15 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டன. தமிழ்நாடு இதில் மிகத் தாமதமாக 2021 ஆம் ஆண்டுதான் தொடங்கியது. தொடங்கிய சில ஆண்டுகளிலேயே, இந்தியாவின் மிகச் சிறந்த புத்தாக்க உதவி நிறுவனம் என்னும் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது பாராட்டத்தக்கதாகும். இதன் முக்கியமான ஒரு அங்கம் புத்தாக்க முயற்சிகளில் சமூக நீதிப் பார்வை எனச் சொல்லலாம். ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடி மக்களுக்கான புத்தாக்க முயற்சிகளுக்கென ஒரு தனிப் பிரிவு மிகவும் வெற்றிகரமாக இயங்கி வருகிறது.

அரசின் நிதிநிலை ஒதுக்கீட்டில் மிகக் குறைவான நிதியே ஒதுக்கப்பட்டாலும், இந்த இரண்டு துறைகளும் மிக வேகமாக வளர்ந்து, தமிழ்நாட்டில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன என்பது கண்கூடு. இத்துறைகளில், முதல்வரும், சம்மந்தப்பட்ட அமைச்சர்களும் (ராஜா, பழனிவேல் தியாகராஜன், தா.மோ.அன்பரசன்) முன்னின்று மிகத் துடிப்போடு இயங்கி வருகிறார்கள். Tamilnadu Development achieved by M.K Stalin

இதன் விளைவாகத்தான், கடந்த ஆண்டு, தமிழ்நாட்டின் பொருளாதாரம் 9.69% வளர்ந்து, நாட்டிலேயே மிக வேகமாக வளரும் மாநிலம் என்னும் பெருமையை அடைந்துள்ளது. 

மனித வள மேம்பாடு Tamilnadu Development achieved by M.K Stalin

1990 களில் இந்தியாவை விட ஏழ்மையாக இருந்த சீனம், அடுத்த 25 ஆண்டுகளில், இந்தியாவை விட 50% அதிகப் பொருளாதார வேக வளர்ச்சியைக் கண்டது. இதன் விளைவாக இன்று உலகின் மிகப்பெரும் வல்லரசாக அறியப்படுகிறது. 

இதன் முக்கியக் காரணங்களாக சீன அரசின் தொழில் மற்றும் நிதிக் கொள்கைகள் இருந்தாலும், அதிகம் அறியப்படாத காரணங்கள் இரு காரணங்கள் உள்ளன.

அவை கல்வியும் சுகாதாரமும். 90 களில், சீனத்தின் கல்வியறிவு பெற்ற மக்களின் எண்ணிக்கை இந்தியாவை விட 23% அதிகமாக இருந்தது. குழந்தைகள் இறப்பு 150% குறைவாக இருந்தது. பிரசவ மரணங்கள் 300% குறைவாக இருந்தன. 

தொழில்துறை வளர்வதற்கான சீன அரசின் கொள்கை முடிவுகள் வந்த போது, அந்த தொழிற்சாலைகளில் பணிபுரிய தகுதியான மனித வளம் ஏற்கனவே தயாராக இருந்தது. குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்னும் கொள்கை காரணமாகவும், 1970களில் முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட சுகாதாரக் கட்டமைப்பு காரணமாகவும், பெண் தொழிலாளர்களும் தேவைக்கு ஏற்ப இருந்தார்கள்.

இந்தத் திசையில், தமிழ்நாடு அரசின் அண்மைக்கால முன்னெடுப்புகள் முக்கியமானவை. பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி, எண்ணும் எழுத்தும், இல்லம் தேடிக் கல்வி போன்ற திட்டங்கள், நான் முதல்வன் போன்ற திட்டங்கள், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும், குறிப்பாக ஏழை, ஒடுக்கப்பட்ட குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களையும் பள்ளிக் கல்வித் திட்டத்தில் அரவணைத்துச் செல்கின்றன. 

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற கல்லூரி சென்று பயிலும் மாணவ மாணவியரை ஊக்குவிக்கும் திட்டங்கள், கல்லூரிகளில் பயிலும் மாணவர் எண்ணிக்கையைக் கணிசமாக உயர்த்தியுள்ளன. பள்ளிக் கல்வியில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ்ஷின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்தது வருகின்றன.

2021 ஆம் ஆண்டில் 90 ஐடிஐகள் இருந்தன. இன்று தமிழ்நாட்டில் 132 ஆக உயர்ந்துள்ளன. இவற்றுள், 71 ஐடிஐகள், தொழில்துறை 4.0 என்னும் தளத்திற்கேற்ப, டாட்டா குழுமத்துடன் இணைந்து மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும் நிறுவனங்களில் நவீன இயந்திரங்களுடன், ரோபோட்களுடன் பணிபுரியும் திறன் பெற்ற தொழிலாளர்கள் கிடைப்பார்கள். Tamilnadu Development achieved by M.K Stalin

இதைத் தவிரவும், ஒன்றிய அரசின் போட்டித் தேர்வுகளான குடிமைப் பணித் தேர்வுகள், வங்கி ஊழியர் தேர்வுகள் போன்றவற்றிற்குத் தயாராக, அரசின் தேர்வுப் பயிற்சி மையங்கள் அதிகரிக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. 

உயர்கல்வித் துறையில் ஊழல் மலிந்து கிடப்பதாக சமூகத்தில் அதிருப்தி நிலவுகிறது. இங்கேதான் தமிழ்நாடு ஒரு முக்கியமான மேம்பாட்டை அடைய வேண்டும். தமிழ்நாட்டில் உயர்கல்வி நிறுவனங்கள், குறிப்பாக அரசு கல்வி நிலையங்களின் தரம் சொல்லும்படியாக இல்லை. Tamilnadu Development achieved by M.K Stalin

இன்றைய உலகில் பாலியல் அசமத்துவம் ஒரு பெரும் குறையாக உள்ளது. சமமான பணிக்கு ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமான ஊதியம் கிடைப்பதில்லை. கீழ் மத்திய, ஏழைக் குடும்பங்களில், பெண்ணுக்கு சரியான உணவும், ஊட்டச் சத்தும் கூடக் கிடைப்பதில்லை. இவையெல்லாம் நம் சமூகத்தைப் பின்னுழுக்கும் காரணிகள்.

உலகில் பாலியல் சமத்துவம் ஏற்படுத்தப்பட்டால், உலகப் பொருளாதாரம் 12 ட்ரில்லியன் டாலர் (இன்றைய இந்தியப் பொருளாதாரம் 4 ட்ரில்லியன் டாலர்) வரை அதிகரிக்கும் என மெக்கின்ஸி உலக நிறுவனத்தின் (Mckensey Global Institute) இயக்குனர் ஜோனதன் வெட்ஸல் (Jonathan Woetzel), ஒரு ஆய்வறிக்கையை முன்வைத்துச் சொல்லியிருக்கிறார். அந்த வகையில், தமிழ்நாட்டில் இரண்டு மகளிர் திட்டங்கள் குறிப்பிடத்  தக்கவை.

பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணமும், அவர்களுக்கு கொடுக்கப்படும் மாதம் ஆயிரம் ரூபாய் உதவியும் இந்த அரசின் மிக முக்கியமான திட்டங்கள். இவையிரண்டுமே, பெண்கள் தங்கள் கணவர்களையோ அல்லது பெற்றோரையோ சார்ந்திருப்பதைக் குறைக்கின்றன. Tamilnadu Development achieved by M.K Stalin

சமூக ஆராய்ச்சிகள் பலவும் சொல்லும் இன்னொரு உண்மை என்னவெனில், ஏழைக் குடும்பங்களில், ஆண் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு முக்கியமான பங்கு ஆணின் சொந்தச் செலவுக்கும் செல்கிறது. ஆனால், பெண்ணுக்குச் செல்லும் பணம், அந்தக் குடும்பத்திற்கே பெரும்பாலும் செல்கிறது என்பதே. குறிப்பாக குடிக்கு அடிமையாக ஆண் இருக்கும் ஏழைக் குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் மிக முக்கியமான உதவியாக இருக்கும்.

சுகாதாரத் துறையில், அரசு நிர்வாகம் பிரச்சினைகளைச் சந்தித்து வந்தாலும், இல்லம் தேடி மருத்துவம் என்னும் புத்தாக்க முயற்சி, ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற கண்ணுக்குத் தெரியாத உயிர்க்கொல்லி நோய்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய மேம்பாடுகளை அடைந்துள்ளது. Tamilnadu Development achieved by M.K Stalin

மக்கள் நலத் திட்டங்களை உருவாக்குவதில், தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்னோடியாக இருந்தது வருகிறது. தமிழ்நாட்டின் பள்ளி உணவுத் திட்டங்கள், இலவசக் கல்வி, பேறுகால நிதி உதவித் திட்டங்கள், மகளிருக்கான உதவித் தொகை என இந்தத் திட்டங்கள் அனைத்தும் இன்று இந்தியாவில் பல மாநிலங்களிலும் நிறைவேற்றப்படுவதே இதற்கான சாட்சி. அத்தளத்தில். கடந்த நான்கு ஆண்டுகளில், மிக முக்கியமான நகர்வுகளை ஸ்டாலினின் அரசு செயல்படுத்தியுள்ளது.

வேளாண்மைTmilnadu Development achieved by M.K Stalin

விடுதலை பெற்ற காலத்தில் இந்தியாவின் மிக முக்கியமான அங்கமான வேளாண்மை, மெல்ல மெல்ல அதன் முக்கியத்துவத்தை  இழந்து வருகிறது. கடந்த 30-40 ஆண்டுகளில், வேளாண்மை ஒரு லாபமில்லாத தொழிலாக மாறியது இந்தியாவின் துரதிருஷ்டம்.

தொழில் துறையும், சேவைத்துறையும் வேகமாக வளர்ந்ததன் விளைவாக, தமிழ்நாட்டில், வேளாண்மை மிகவும் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது.  இங்கே  வேளாண் துறை அமைச்சர் பன்னீர் செல்வம் இருக்கிறார். வேளாண் துறைக்கான ஒதுக்கீடும்  இருக்கிறது. ஆனால், இலக்கு தவறாக இருக்கிறது.

திரும்பத் திரும்ப வேளாண்மைத் துறையும், ஆராய்ச்சி நிறுவனங்களும், உற்பத்திப் பெருக்கம் என்னும் இலக்கை முன்வைத்தே செயல்படுகின்றனவே ஒழிய, வேளாண்மையை லாபகரமாக ஆக்குவது எப்படி என்னும் இலக்கைப் பேசுவதே இல்லை. மக்கள் தொகை பெருக்கம் காரணமாக சராசரி வேளாண் அலகு 2 ஏக்கருக்கும் கீழே போய்விட்டது. வணிகப்பயிர்களான கரும்பு, மஞ்சள் போன்றவை கூட லாபம் இல்லாமல் போய்விட்டன. மானியங்களை நம்பி, இன்று வேளாண்மை உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு மரணப்படுக்கையில் இருக்கிறது.

இங்கே வழமையான ஆராய்ச்சி, உற்பத்தி மற்றும் செயல் திறன் அதிகரிப்பு என்னும் இலக்குகளை நோக்கிய பயணத்தில், தமிழ்நாடு அரசு செய்யும் முதலீடுகள், உழவர்கள் வாழ்வில் மேம்பாட்டை உருவாக்க வில்லை.  அந்த அணுகுமுறை முற்றிலும் தோல்வியடைந்த ஒன்று. ஒரே ஆறுதல், 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, 400 ஏக்கர் சராசரியாக வைத்திருக்கும் அமெரிக்காவிலும் இதே நிலைதான்.  ஆனால், அதற்காக இத்துறையை, குறிப்பாக உணவு உற்பத்தியில் தன்னிறைவை அரசு ஒருபோதும் கைவிடலாகாது.

இங்கே புதிதாக உழவர்களின் நலம் நாடும் நிறுவனங்கள் (ஆவின் போல) உருவாக்கப்பட வேண்டும். புத்தாக்க முயற்சிகளுக்கு பெருமளவில் ஆதரவு தரப்பட வேண்டும். முந்தய அதிமுக ஆட்சிக் காலத்தில் காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டது. வேளாண்மை லாபகரமாக இருந்தால்தான் வேளாண் மண்டலம் உயிர்ப்புடன் இருக்கும். திருவாரூரின் மைந்தரான முதல்வர் மு.க.ஸ்டாலின், இத்துறையில் உழவர்கள் லாபம் பெறும் வகையில், அரசின் அணுகுமுறையை மாற்றி அமைக்க வேண்டியது மிக அவசரமான, முக்கியமான கடமை. இல்லையெனில், இந்தத் துறை மிக வேகமான பின்னடைவுகளைச் சந்திக்கும். 

தமிழ் பண்பாட்டு அடையாளம், இலக்கியச் செயல்பாடுகள்

தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட தொழில்துறை, நிதித் துறை இரண்டிலுமே  சிறப்பாகப் பணியாற்றி வந்தாலும், தொல்லியல், தமிழ் மேம்பாடு என இந்த இரண்டு தளங்களிலுமே தன் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக, மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார் தங்கம் தென்னரசு.  சாகித்ய அகாடமி வாங்கிய எழுத்தாளர்களுக்கு இலவச வீடு, மாவட்டம் தோறும் புத்தக கண்காட்சிகள், அவற்றையொட்டி இலக்கிய விழாக்கள், உலகப் புத்தகச் சந்தை போன்றவை தமிழ்நாட்டில் பலருக்கும் பெரும் உதவியாக இருக்கிறது.

புதிதாக மதுரையில் உருவாக்கப்பட்ட மாபெரும் நூலகம், அதே அலகில் கோயமுத்தூர், திருநெல்வேலி போன்ற நகரங்களில் உருவாகவிருக்கும் நூலகங்கள் என இத்துறை மிகத் துடிப்பாக இயங்கத் தொடங்கியிருக்கிறது. கீழடியில் உருவாக்கப்பட்டிருக்கும் அருங்காட்சியகம் உலகத் தரத்தில் இருக்கிறது. Tamilnadu Development achieved by M.K Stalin

சட்டம் ஒழுங்கும் சமூக மேம்பாடும்

இந்த அரசின் மிகப் பலவீனமான பக்கம் என்றால், அது சட்டம் ஒழுங்குதான். குறிப்பாக தலித் சமூகத்திற்கு எதிரான வன்முறை. தலித் சமூகத்திற்கான புதிய பயன் தரும் திட்டங்கள், கல்வித்துறை உதவிகள், புத்தாக்க முயற்சிகளுக்கென தனி நிதி ஒதுக்கீடு போன்றவை நல்ல முறையில், முந்தய ஆட்சியை விடச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.  தலித் மக்களின் மேம்பாடும் நிகழ்கிறது.

இந்த மேம்பாடு, ஊரகப் பகுதிகளில் இருக்கும் மேலாதிக்க சாதிகளின் சமூக அதிகாரத்தைச் சீண்டுகிறது. இதன் விளைவாக, ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறை தொடர்கிறது, புள்ளி விவரங்களைக் கொண்டு, நம் மாநிலம் இதர மாநிலங்களை விட மேலாக இருக்கிறது என இந்தத் துறையில் யாரும் பெருமை பேசிவிட முடியாது. கழிவு நீர் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் ஒடுக்கப்பட்ட சாதியினர் மரணம் அடைவது தொடர்கிறது. இந்த மரணப் புள்ளிவிவரம் சொல்வது முக்கியமான அளவீடு – தமிழ்நாடுதான் நாட்டின் முதன்மை மாநிலம். Tamilnadu Development achieved by M.K Stalin

தலித்துகளுக்கு எதிரான வன்முறைகள், மற்றும் சாவுகள் அறவே ஒழிக்கப்பட வேண்டும். இங்கே வெளிப்படையாக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க அரசு தயங்குவது தெளிவாகத் தெரிகிறது. தலித் மக்களின் பாதுகாப்பில் ஒரு குறைபாடு கூட இருக்கக் கூடாது என்னும் அணுகுமுறையை எடுக்காதவரை, தமிழ்நாட்டை சமூக நீதி மண் எனக் கொண்டாடுவதில் அர்த்தமில்லை.

இன்னுமொரு முக்கிய அவலம் – காவல்துறையின் அத்துமீறல்கள் கண்டுகொள்ளப்படாமல் இருத்தல்.  அம்பாசமுத்திரத்தில் நிகழ்ந்த அவலம், ஸ்டெர்லைட் போராட்டத்தில் சட்டத்துக்குப் புறம்பான துப்பாக்கி சூடு போன்ற நிகழ்வுகளில் தொடர்புடைய எந்த அதிகாரியும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. காவல்துறையின் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் தயங்குகிறார் என்னும் ஒரு கருத்து நிலவி வருகிறது. இது இந்த அரசின் மீதான தீராத களங்கம்.

2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 ட்ரில்லியன் டாலராக உயர வேண்டும் என்னும் இலக்குடன் தன் ஆட்சியைத் தொடங்கிய மு.க.ஸ்டாலின், கடந்த 4 ஆண்டுகளில், அந்த இலக்கை அடைய வேண்டிய கொள்கை முடிவுகளை, முன்னெடுப்புகளை மிக வெற்றிகரமாகச் செய்து வருகிறார்.  பொருளாதாரத்தின் மிக முக்கியமான அங்கங்களான தொழில்துறை, சேவைத் துறை இரண்டுமே மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. தொய்வடைந்திருந்த ஆட்சி நிர்வாகம் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு வருகிறது. மக்கள் நலத் துறையில் முக்கியமான புத்தாக்க திட்டங்கள் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  இந்தத் துறைகளில், இளம் அமைச்சர்களை, சரியான நிர்வாகிகளை நியமித்தது மு.க.ஸ்டாலின் அவர்களின் நிர்வாகத் திறனைக் காட்டுகிறது.  இந்தத் துறைகளை முடுக்கிவிட்டு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியதற்காக, ஸ்டாலின் வரலாற்றில் நினைவுகூறப்படுவார்.  இந்த ஆண்டு தமிழ்நாடு, நாட்டிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக உயர்ந்திருப்பது (9.69%) தற்செயலான ஒன்றல்ல. இதன் பின்னே ஸ்டாலின் அவர்களின் உழைப்பு இருக்கிறது. T

ஆனால், ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடரும் வன்முறை, வேளாண்மையின் லாபமின்மை, காவல்துறை மீதான மென்மையான அணுகுமுறை, இவை இந்த அரசின் பலவீனங்களாக கண்ணை உறுத்துகிறது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க புத்தாக்க சிந்தனைகளும், அணுகுமுறையும் தேவை. அவை இல்லாமல் போனது, திமுக அரசியல் சித்தாந்தத்தின், அரசின் பலவீனம். Tamilnadu Development achieved by M.K Stalin

கட்டுரையாளார் குறிப்பு

The path to India by balasubramaniam muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share