காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 15) காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தியா மட்டுமல்லாது லண்டனில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பும் இந்திய ஓவர்சீஸ் காங்கிரஸ் கட்சி கடந்த மார்ச் 27 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 15) தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறியல் போராட்டத்தில் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டுள்ளார். காங்கிரஸ் ரயில் மறியலில் ஈடுபடும் இடங்களில் எல்லாம் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
சேலம் ரயில் நிலையத்தில் கோவை எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினருக்கும் காங்கிரஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை குரோம்பேட்டையில், அனுமதியின்றி தண்டவாளத்தில் இறங்கி புறநகர் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே களம்பூர் ரயில் நிலையத்தில், திருப்பதியில் இருந்து ஆரணி மார்க்கமாக விழுப்புரம் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால், போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து, அங்கே அருகில் இருக்கும் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளனர் காவல் துறையினர்.
காங்கிரஸ் போராட்டத்தால் ஆங்காங்கே ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
மோனிஷா
